With Love Box Office: வித் லவ் புக்கிங் டல்லடிக்குதே.. அபிஷன் ஜீவிந்துக்கு ஓபனிங் கிடைக்குமா?
சென்னை: டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 90 கோடி அளவுக்கு வசூல் செய்த நிலையில், அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள படத்துக்கு கண்டிப்பாக பெரிய ஓபனிங்கை செய்தாக வேண்டும் என செளந்தர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டு தந்தை ரஜினிகாந்தையும் திரையுலக பிரபலங்களை அழைத்து ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோ போட்டு பாசிட்டிவ் விமர்சனங்களை பரப்பினார்.
வித் லவ் திரைப்படத்துக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர். ஆனால், இன்று வெளியான படத்தின் டிக்கெட் புக்கிங் சென்னையிலேயே ரொம்ப டல்லடித்து காணப்படுவது படக்குழுவை மட்டுமல்ல இந்த மாதம் இந்த படத்தை பெரிதும் நம்பியிருந்த தியேட்டர் ஓனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடைசியாக ரீ ரிலீஸான மங்காத்தா திரைப்படம் கூட ஏகப்பட்ட திரையரங்குகளில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. ஆனால், 'வித் லவ்' படத்துக்கு பெரிதாக ஓபனிங் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளில் அந்த படத்தை வாங்கி வெளியிட்ட பல தியேட்டர்களும் பச்சை நிறமாகவே காட்சியளிக்கிறது.
ரஜினி முதல் ஸ்ருதிஹாசன் வரை
மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியான வித் லவ் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த இந்த படத்தை சமீபத்தில் சத்யம் தியேட்டரில் செலிபிரிட்டிக்களை அழைத்து வந்து சிறப்பு காட்சி போட்டுக் காண்பித்தனர். கே.எஸ். ரவிக்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன், ஸ்ருதிஹாசன், ரத்னகுமார், சிம்ரன் என பல பிரபலங்கள் படத்தை பார்த்து பாராட்டினர்.
ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த் அசத்தல்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றிக்குப் பிறகு அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார். மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நடித்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் வந்த நிலையிலும், படத்தின் டிரைலர் மற்றும் புரமோஷன்களால் மக்கள் பெரிதாக ஈர்க்கப்படவில்லை என்றே தெரிகிறது. ஹீரோவாக சிறப்பான நடிப்பை அபிஷன் ஜீவிந்த் செய்துள்ளதாக கூறப்பட்டாலும் பிரதீப் ரங்கநாதன் போல மக்கள் இவரை ஏற்றுக் கொண்டால் மட்டுமே படம் வெற்றியை பெறும்.

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?
ரோகிணி, காசி, ஏஜிஎஸ், மாயாஜால் போன்ற பிரபல திரையரங்குகளிலேயே முதல் நாள் பெரிதாக டிக்கெட் புக்கிங் இல்லாமல் பச்சை நிறத்திலேயே காட்சியளிக்கின்றன. சில பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே ஆரஞ்சு நிறத்தில் குறைந்த பட்ச டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதனால் முதல் நாள் வசூல் 1 கோடி அளவுக்கு கூட வருமா? என்பது சந்தேகம் தான் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மவுத் டாக் காப்பாற்றுமா?
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் ஆரம்பத்தில் ஓபனிங் இல்லை. ஆனால், பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் மக்களின் மவுத் டாக் மூலம் அந்த படம் பிக்கப் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே போல 'வித் லவ்' படத்துக்கும் சனி மற்றும் ஞாயிறு படம் பிக்கப் ஆனால் மட்டுமே வசூல் சாத்தியம் என்கின்றனர். தமிழ் சினிமாவையும் தியேட்டரையும் காப்பாற்ற சீக்கிரமே டாப் நடிகர்களின் படங்கள் வந்தால் தான் உண்டு என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











