கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றினாரா லோகேஷ் கனகராஜ் இணை இயக்குநர்?.. காதலி பரபரப்பு புகார்
சென்னை: லோகேஷ் கனகராஜின் இணை இயக்குநரும் பாடலாசிரியருமான விஷ்ணு இடவன் மீது அவரது காதலி அளித்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர் திரைத்துறை மீது இருக்கும் ஆர்வத்தால் தனது பணியை துறந்துவிட்டு வந்து எடுத்த மாநகரம் படம் அனைவரையும் ஈர்த்தது. அதனையடுத்து அவர் கார்த்தியை வைத்து இயக்கிய கைதி படம் மெகா ஹிட்டானது.

மாஸ்டர் தி ப்ளாஸ்டர்
முதல் இரண்டு படங்களும் சிறப்பான பெயரை லோகேஷ் கனகராஜுக்கு எடுத்துக்கொடுக்க மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு அமைந்தது. இருவரும் இணைந்து மாஸ்டர் படத்தை கொடுத்தனர். அந்தப் படமும் ஹிட்டாக மோஸ்ட் வாண்டட் இயக்குநரானார் லோகேஷ் கனகராஜ்

கமலுடன் இணைந்த லோகேஷ்
இதனையடுத்து தனது ஆஸ்தான ஹீரோ கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பு விக்ரம் படம் மூலம் லோகேஷுக்கு கிடைத்தது. அந்தப் படம் 500 கோடி ரூபாய் வசூலிக்க இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குநரானார் லோகேஷ் கனகராஜ். தற்போது அவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இணை இயக்குநர் விஷ்ணு இடவன்
லோகேஷ் கனகராஜுக்கு ஏகப்பட்ட உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் விஷ்ணு இடவன். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ தொடர்ந்து அவருடன் பணியாற்றி வருபவர். இணை இயக்குநர் மட்டுமின்றி பாடலாசிரியராகவும் ஜொலித்து வருகிறார் விஷ்ணு. அந்தவகையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பொளக்கட்டும் பற பற, விக்ரம் படத்தில் இடம்பெற்ற போர்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் என ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளியான டாடா படத்திலும் அவர் பாடல் எழுதியிருக்கிறார்.

காதலில் உருவான பிரச்னை
இப்படி திரைத்துறையில் படிப்படியாக வளர்ந்துவரும் விஷ்ணு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்தப் பெண் கர்ப்பமாகிவிட்டதாகவும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். நிலைமை இப்படி இருக்க விஷ்ணு திடீரென அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

காவல் நிலையத்தில் காதலி கொடுத்த புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ளுமாறு விஷ்ணுவிடம் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார். எனினும் விஷ்ணு திருமணம் செய்ய தொடர்ந்து மறுத்துவருகிறார் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் விஷ்ணு இடவன் மீது சென்னை திருமங்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த விவகாரம் கோலிவுட்டில் பேசுபொருளாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











