Love Reddy: வில்லன் நடிகருக்கு பெண்ணிடம் விழுந்த அடி உதை.. தியேட்டரில் நடந்த அடிதடி சம்பவம் - வீடியோ
கோலார்: சினிமாவில் நடிகர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களைப் பார்த்து அதுதான் அவர்களின் உண்மையான குணம் என நினைத்துக்கொள்ளும் ரசிகர்கள் இன்றைக்கும் உள்ளனர். இதுமட்டும் இல்லாமல், படங்களை நிஜம் என நம்பும் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர். அப்படி திரையில் தோன்றுவதைப் பார்த்து வில்லன் நடிகர்களை திட்டக்கூடிய ரசிகர்கள் இருக்கும் நமது ஊரில், அனைவரையும் கடுங் கோபத்திற்கு ஆளாக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட்டு, ரசிகர்கள் முன் நின்றால் என்ன நடக்கும் என்பதற்கு சாட்சியாக ஒரு சம்பவம் கோலார் பகுதியில் நடைபெற்றுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
கடந்த வாரம் அதாவது அக்டோபர் 18ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆன படம் லவ் ரெட்டி. இந்தப் படத்தினை இயக்குநர் ஸ்மரன் ரெட்டி இயக்க, அதில் அஞ்சன் ராமச்சந்திரா, ஷ்ரவாணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லவ் ரெட்டி படத்தை கீதன்ஸ் புரொடக்ஷன்ஸ், செஹேரி ஸ்டுடியோ மற்றும் எம்ஜிஆர் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் சுனந்தா பி. ரெட்டி, ஹேமலதா ரெட்டி, ரவீந்தர் ஜி, மதன் கோபால் ரெட்டி, நாகராஜ் பிரபா, பிரபஞ்சன் ரெட்டி மற்றும் நவீன் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரின்ஸ் ஹாரி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், பல காட்சிகள் இப்போதும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டு உள்ளது.

படம் உண்மைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்ததாலும், படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் என்.டி. ராமசாமி நடித்திருந்தார். அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். படம் பார்த்த பலரும் அவரது வில்லத்தனத்தை பாராட்டினர்.

ரசிகை: இந்நிலையில் கோலாரில் உள்ள மல்டி ஃபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களை படம் முடிந்த பின்னர் படக்குழுவினர் சந்தித்தனர். அரங்கம் நிறைந்து காணப்பட்ட தியேட்டரில் ரசிகர்கள் இவர்களைப் பார்த்ததும் கைகள் தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் பலர் இவர்களைப் புகைப்படங்கள் எடுக்கவும் வீடியோக்கள் எடுக்கவும் செய்தனர். இப்படியான நிலையில் படம் பார்த்த ரசிகை ஒருவர், கூட்டத்திற்குள் இருந்து ஓடி வந்தார்.

அடி- உதை: ஓடிவந்த பெண் வில்லன் நடிகர் என்.டி. ராமசாமியை நோக்கி ஓடி வந்தார். மேலும், அவரை சராமாரியாக தாக்கினார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், என்.டி. ராமசாமியின் கன்னத்திலேயே பளார் பளார் என அறைவிட்டார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணைத் தடுத்தனர். மேலும் அந்தப் பெண் என்.டி. ராமசாமியைத் தாக்கும்போது, " அவர்களைச் சேர விடமாட்டயா" எனக் கூறிக்கொண்டே அடித்தார். அருகில் இருந்தவர்கள் தடுத்தபோது அவர்களை மீறியும் வந்து அடித்தார்.

கமெண்ட்: இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக அந்தப் தன்னை எதற்காக அடித்தார் என புரியாமல் வில்லன் நடிகர் என்.டி. ராமசாமி திகைத்துப் போனதுமட்டும் இல்லாமல் திணறிவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலர், 'நடிகருக்கு நல்ல விருதும் பாராட்டும் கிடைத்துவிட்டதுபோல' என கமெண்ட் செய்து வருகின்றர். சிலரோ படத்தின் புரோமோசனுக்காக படக்குழுவினரே இதுபோன்ற ஏற்பாட்டினைச் செய்திருக்கலாம் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











