மதுரையில் ஆபாச சினிமா போஸ்டர்கள்- ஆவேசமாய் கிழித்தெறிந்த பெண்கள்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் மெயின் ரோட்டிலும், விருதுநகர் ரோட்டிலும் உள்ள 2 தியேட்டர்களில் ஆபாசப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அதற்கான ஆபாச போஸ்டர்கள் நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் ஆபாசப் படங்கள் திரையிடப்பட்டிருந்த தியேட்டர்களுக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். அங்கு ஒட்டப்பட்டிருந்த ஆபாச போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.
மதுரையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாதர் சங்க நிர்வாகி பொன்னுத்தாய், மாதர் சங்க மாவட்ட தலைவர் முத்துராணி, தாலுகா செயலாளர் வேலம்மாள், தாலுகா தலைவர் பிரேமா ஆகியோர் உள்பட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச போஸ்டர்களை கிழித்து எறிந்தனர்.
பெண்களின் திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தியேட்டர்களில் தொடர்ந்து ஆபாசப் படங்களையே திரையிட்டு வருகிறார்கள். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்கள்.
இதை கண்டித்து போஸ்டர்களை கிழித்தோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஆண்டவர், முத்துக்காளை ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











