பெண் என்றால் இழிவா… டாக்டர் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி… மகளிர் அமைப்பினர் கண்டனம் !
சென்னை : சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை நீக்கக்கோரி மகளிர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
டாக்டர் திரைப்படம் திரையரங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்துத் தரப்பினரும் அந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
தற்போது மகளிர் அமைப்பினர் இப்படத்திற்கு போர்கொடி தூக்கி உள்ளதால் படக்குழுவினர் பெரும் சிக்கலை சந்தித்துள்ளனர்.

டாக்டர்
கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த படம் மூலமாக தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு. வினய், தீபா, விஜே அர்ச்சனா, அர்ச்சனாவின் மகள் சாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்துள்ளது.

வரவேற்பு
டாக்டர் திரைப்படம் 9ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டாக்டராக நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கும் பிரியங்காவிற்கும் இடையே திருமணம் நடைபெற இருந்த போது, சிவகார்த்திகேயனின் நடவடிக்கை பிடிக்காமல் திருமணத்தை நிறுத்து விடுகிறார் பிரியங்கா. இந்த நேரத்தில் சிவகார்த்திகேயனின் அண்ணன் மகள் கடத்தப்படுகிறாள் அவளை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை.

படம் முழுக்க காமெடி
கோலமாவு கோகிலா திரைப்படம் போல படம் முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. 9ந் தேதி வெளியானத் திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. சென்னையில் மட்டும் 64 லட்சமும், வெளிநாடுகளில் 3 கோடிக்கும் மற்ற மாநிலங்களில் லட்சங்களிலும் படம் வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் 7.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகளிர் அமைப்பினர் கண்டனம்
இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு காட்சிக்கு மகளிர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதாவது டாக்டர் படத்தில் விளையாட்டில் தோல்வி அடையும் ஆண் ஒருவருக்கு நைட்டி அணிவித்து தலையில் பூ வைத்து இனிமேல் உன் பெயர் கோமதி என கூறி கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

பெண் என்றால் இழிவா
இந்த காட்சியை கண்டித்துள்ள மகளிர் அமைப்பினர் பெண்கள் என்றால் அவ்வளவு இழிவா? பெண் ஆடையை அணிந்தால் கேவலமா எனக் கூறி இந்த காட்சியை நீக்க வேண்டும் என்று படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினருக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











