ரஜினியோடு மோதுவாரா சிவகார்த்திகேயன்?.. விஜய்க்கு மரியாதை கொடுக்கணும்.. வேண்டுகோள் வைக்கும் பிரபலம்!
சென்னை: விஜய்யின் ஜனநாயகனும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ஜனவரி மாதத்தில் அடுத்த நாட்களில் வருகின்றன. இதன் காரணமாக இரண்டு பேரின் படத்தில் எந்தப் படம் அதிகம் வசூலிக்கும் என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க துப்பாக்கி கொடுத்த விஜய்யையே எப்படி எதிர்க்கலாம் என்று விஜய்யின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பதிவுகளை போட்டுவரும் சூழலில்; பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஜனவரி பத்தாம் தேதி இப்படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் Vs சிவகார்த்திகேயன்: இரண்டு படங்களும் பொங்கலுக்கு வருவதன் காரணமாக ஜனநாயகன் Vs பராசக்தி என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி இது விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் போட்டியாகவும் இரண்டு பேரின் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. அதிலும் சிவா போட்டிக்கு வந்ததை விஜய் ரசிகர்களால் கனவிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது. பலரும் எஸ்கேவுக்கு எதிராக களமாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

எப்படி வரலாம்?: கோட் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்து; தமிழ் சினிமாவை விஜய் ஒப்படைத்தார். அப்படி வழி விட்டவரின் கடைசி படத்தின் வியாபாரத்தை கெடுக்கும் நோக்கத்தில்தான் பராசக்தியோடு சிவா வருகிறார் என்பது தளபதி ரசிகர்களின் திண்ணமான கருத்து. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை; இது முழுக்க முழுக்க தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவுதான்; இதற்கும் சிவாவுக்கும் சம்பந்தமே இல்லை என்பது எஸ்கே ரசிகர்கள் மற்றும் அபிமானிகளின் கருத்தாக இருக்கிறது.
சோஷியல் மீடியாவில் மோதல்: பராசக்தி போட்டிக்கு வந்ததை எதிர்பார்க்காத விஜய் ரசிகர்கள்; தங்களது ஆதங்கங்களையும், கோபத்தையும் சோஷியல் மீடியாவில் கொட்டிவருகிறார்கள். இரண்டு படங்களின் ரிலீஸுக்கும் இன்னும் பத்து நாட்கள் இருக்கும் சூழலிலேயே இப்படி மோதல் வெடிக்கிறது என்றால்; ரிலீஸ் நெருங்கிவிட்டால் இன்னும் இது அதிகரிக்குமே என திரைத்துறை ஆர்வலர்கள் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
அந்தணன் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "இதே நாளில் ரஜினி படம் வருகிறது என்று வையுங்கள். சிவகார்த்திகேயன் மோதுவாரா? மோதமாட்டார்தானே. ரஜினியைவிடவும் விஜய் பெரியவரா சிறியவரா என்பதற்குள் நான் போகவில்லை. ஆனால் ரஜினி, கமல் என்பதற்கு எப்படி மரியாதை இருக்கிறதோ; அதேமாதிரி விஜய்க்கும் ஒரு மரியாதை இருக்கிறதுதானே. அதை கொடுக்க வேண்டும்தானே. அதைத்தான் சிவகார்த்திகேயன் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்யவில்லை என்பதுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம்" என்றார்.


Click it and Unblock the Notifications











