கதைத் திருட்டு விவகாரம்.. வெற்றிமாறன் கப்சிப்னு இருக்க என்ன காரணம்.. கோபப்பட்ட எழுத்தாளர் ஜெயராணி!

சென்னை: தமிழ் ஊடகத்துறை மற்றும் இலக்கியத் துறையில் தவிர்க்க முடியாத நபராக இருப்பவர் எழுத்தாளர் ஜெயராணி. எழுத்தாளராக மட்டும் இல்லாமல் களத்தில் இறங்கி வேலை பார்க்கும் களப்பணியாளராகவும் ஜெயராணி உள்ளார். தமிழில் உள்ள மிகவும் முக்கியமான பெண் எழுத்தாளர்களில் ஜெயராணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதில் தனது சிறுகதை ஒன்றை திருடி, திரிபு செய்து குறும்படமாக உருவாக்கியுள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "Seeing Red கதைத் திருட்டு, பார்ப்பனியத் திரிபுவாதம் மற்றும் வரலாற்று அநீதி!. என்னுடைய பெயர் ஜெயராணி. நான் 25 ஆண்டுகளாக தமிழ் ஊடகத் துறையில் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கி வருகிறேன். சாதியம், மதவாதம் ஆணாதிக்கத்திற்கு எதிராகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் செயல்பட்டும் வருகிறேன். பிரபல பத்திரிகைகளில் வெளிவந்த எனது கட்டுரைகள் ஆறு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் 2024 டிசம்பர் மாதம் சென்னை புத்தகக் காட்சியில் 'சால்ட்' பதிப்பகத்தின் மூலமாக 'செந்நிலம்'என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டேன். பெரும் கவனத்தைப் பெற்று விற்பனையிலும் சாதித்த 'செந்நிலம்' நூல் குறித்தான விமர்சனங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழின் அச்சு, இணைய இதழ்களில் தொடர்ந்து வெளிவருகின்றன.

இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள, ''செவ்வரளிப் பூச்சரம்'' என்ற சிறுகதை - எனக்குத் தெரியாமல், என்னுடைய அனுமதி இல்லாமல், உரிய அங்கீகாரமோ அதற்கான தொகையோ அளிக்கப்படாமல் அண்மையில் ஷாலினி விஜயகுமார் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'Seeing Red' என்ற படத்தில் அப்பட்டமாக திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றேன்.

Writer Jeyarani Slams Seeing Red Short Film Director Shalini Vijayakumar and Vetrimaran For story theft

செவ்வரளிப் பூச்சரம்: ஏப்ரல் 24, 2025 அன்று என் நண்பர் ஒருவர், 'உங்கள் கதையை படமாக்கி இருக்கிறார்கள் பாருங்கள்' என அனுப்பி வைத்ததும் அதை உடனே பார்த்தேன். தலைப்பு (செவ்வரளிப் பூச்சரம் - Red Oleander flower wreath) காலகட்டம் மற்றும் வகைமை உட்பட எல்லாமே அங்குலம் அங்குலமாக திருடப்பட்டிருப்பது மட்டுமின்றி பார்ப்பனத் திரிபிற்கும் ஆளாகியிருப்பது கண்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

இந்நாட்டின் கிராமப்புற விளிம்புநிலை சமூகத்தை சேர்ந்த, உழைக்கும் வர்க்கப் பெண்கள் பலவிதமான சமூக, மத, பண்பாட்டு (மூட) நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின் பெயரால் அழுத்தப்படுவதை நேரில் பார்த்தும் அனுபவித்தும் வளர்ந்தவள் நான். ஒரு பத்திரிகையாளராக என் களப்பணியில் இப்படியான பல கொடுமைகளை நேரில் பார்த்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன். அவற்றில் சாமியாடுதலும் பேய் பிடித்தலும் கிராமப்புற விளிம்புநிலைச் சமூகப் பெண்களின் வாழ்வில் திணிக்கப்பட்ட பேரழுத்தமாக நீடிக்கிறது. பரிகாரம் என்ற பெயரில் பல விதமான கொடுமைகளை அவர்கள் அனுபவிக்கின்றனர்.

Writer Jeyarani Slams Seeing Red Short Film Director Shalini Vijayakumar and Vetrimaran For story theft

பேயோட்டுதல்: சிறு குழந்தையாக என் அம்மாவுக்கும் என் ஊரிலிருந்த பல பெண்களுக்கும் நடத்தப்பட்ட பேயோட்டுதல் சடங்கைப் பார்த்து தாளமாட்டாமல் அழுது, பரிதவித்த அனுபவம் பாறாங்கல்லை போல என் மனதில் அழுத்திக் கிடந்தது. என் மன பாரத்தை இறக்கி வைக்கும் விதமாகவும் இப்படியான சடங்குகளை கேள்விக் கேட்கும் விதமாகவே ''செவ்வரளிப் பூச்சரம்'' என்ற கதையை எழுதினேன். சாட்டையால் அடிக்கப்படும் பேயோட்டுதல் சடங்கு பெண்களுக்கு உண்டாக்கும் வேதனைக்கு எதிர்வினையாக பெண்கள் ஒன்று கூடி ஆண்களை திருப்பியடிப்பதாக கதையை எழுதி முடித்த போது, அது எனக்கு பெரும் நிம்மதியை அளித்தது.

ஆனால் அந்த நிம்மதி சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. பண்பாட்டு ரீதியாக விளிம்புநிலை சமூகப் பெண்கள் சடங்குகளின் பெயரால் அனுபவிக்கும் ஒரு கொடுமை குறித்த என் கதையை, திருடியது மட்டுமல்லாமல், அக்கதை ஒரு பார்ப்பனக் குடும்பத்திற்குள் நடப்பதாகவும் பேயை மடிசார் கட்டிய மாமியாகவும் மாற்றி பார்ப்பனத் திரிபுவாதமும் செய்யப்பட்டுள்ளது. செவ்வரளிப் பூச்சரம் கதையில் பேயோட்டுபவராக வரும் 'சவுக்கு சுடலை' என்ற கதாபாத்திரத்தை 'விப்படி மூர்க்கன்' என பெயர் மாற்றி பார்ப்பன வீட்டிற்குள் பேயோட்டப் போவதாகத் திரிபு செய்தது மட்டுமின்றி பார்ப்பனரல்லாத அக்கதாபாத்திரத்தை சாதி ரீதியாக இழிவுபடுத்தும் வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Writer Jeyarani Slams Seeing Red Short Film Director Shalini Vijayakumar and Vetrimaran For story theft

மடிசார் மாமி: அதே போல என் கதையின் நாயகியான ''பேய் பிடித்தாடும்'' செண்பகத்தின் நடை, உடை, அலங்காரம், பாவனையை திருடி (அவர் இடும் சொடுக்கு உட்பட) மடிசார் கட்டிய மாமி பேயை உருவாக்கியுள்ளனர். பார்ப்பனப் பெண்கள் பேய் பிடித்து ஆடியோ அதற்காக பார்ப்பனரல்லாத பேயோட்டியிடம் சவுக்கடி வாங்கியோ என் களப்பணியில் நான் எங்கேயும் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதில்லை.

மேலும் ஒரு பார்ப்பனரல்லாத பேயோட்டியின் சவுக்கால் அடி வாங்கப் போவதாக காட்டுவது அப்பட்டமான வரலாற்றுப் பொய். பார்ப்பன வீட்டில் ஏதாவது கெடுதல் நடந்தால் பரிகாரமாக ஹோமம் செய்வதுதான் பார்ப்பனர்களின் பண்பாட்டு மற்றும் மத வழக்கம். ஆனால் இந்த உண்மைக்கு மாறாக, என் கதையில் வரும் பார்ப்பனரல்லாத பேயோட்டிக் கதாபாத்திரத்தை அப்படியே திருடி அவரின் சவுக்கால் பார்ப்பனப் பெண்களை அடிக்கப் போவதாகக் காண்பித்தது ஓர் அப்பட்டமானத் திரிபுவாதமாகும். இது போல முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை Seeing Red படத்தில் எல்லாமே என் கதையின் திருட்டும் பார்ப்பன திரிபும்தான்.

Writer Jeyarani Slams Seeing Red Short Film Director Shalini Vijayakumar and Vetrimaran For story theft

Seeing Red : என் கதையை அனுமதியின்றி பயன்படுத்தியும் திரிபு செய்தும் எடுக்கப்பட்ட இந்த ''Seeing Red'' குறும்படம் MAMI என்ற மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, MAMI SELECT திரைப்பட விழாவின் பிரம்மாண்ட மேடையில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. துளி அறவுணர்வோ குற்றவுணர்வோ இல்லாமல் தன் சொந்த படைப்பைப் போல இந்த பெருமைகளை தன் தோளில் ஏந்திக் கொள்கின்றனர். இது காலங்காலமாக இந்தியச் சமூகத்தில் ஆதிக்க சாதியினர் நடத்தும் உழைப்புச் சுரண்டல், அறிவுச் சுரண்டல், படைப்புச் சுரண்டல் மற்றும் பண்பாட்டுச் சுரண்டல் மற்றும் திரிபுவாதங்களின் நீண்ட வரலாற்றின் நீட்சியன்றி வேறில்லை.

திருட்டு: கல்வியும் அதிகாரமும் மறுக்கப்பட்ட இந்நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்திற்கும் அது இரண்டையும் பிறப்புரிமையாக பதுக்கி வைத்துக் கொண்ட சுயநலச் சமூகத்திற்கும் இடையிலான போர் இது. இது போன்ற மேடைகளுக்கும் விளிம்புநிலை சமூக மக்களுக்குமிடையே இருந்த இடைவெளியால் இத்திருட்டுகளும் திரிபுகளும் நெடுங்காலம் கேட்பாரற்று நீடித்து வந்தன. திருட்டு மற்றும் திரிபுக்கு எதிரான விளிம்புநிலைச் சமூக மக்களின் குரல்களும் போராட்டங்களும் வரலாறு நெடுக மறைக்கப்பட்டன.

Writer Jeyarani Slams Seeing Red Short Film Director Shalini Vijayakumar and Vetrimaran For story theft

துணிச்சல்: ஆனால், இந்த சமூக ஊடகக் காலத்திலும் இது போன்ற திருட்டுகளை உரிமையாளர்கள் அறிய மாட்டார்கள் என்று இவர்கள் நம்புவதுதான் வியப்பையும் கோபத்தையும் உண்டாக்குகிறது. அல்லது தெரிந்தால் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறார்களா? ஒரு கதை பிடித்திருந்தால் அதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படை நேர்மையைக் கூட கற்காமல், சத்தமில்லாமல் திருடிக் கொண்டால் போதுமானது என்ற துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?

வெற்றிமாறன்: இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் வழிகாட்டியாகவும் ஒழுங்கமைப்பாளராகவும் இருப்பதால் உடனே அவரிடம் முறையிட்டேன். கதையை படித்துவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி ஒரு வார காலமாகியும் அவருக்கு அதற்கு நேரம் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார். இது திருடப்பட்ட கதை என்பது அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் பார்ப்பன பெண்கள் பண்பாட்டு ரீதியாக இப்படியான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கிறார்களா இல்லை விளிம்புநிலை சமூகப் பெண்களின் வலியையும் வேதனையையும் இவர்கள் தன்வயப்படுத்தி கொள்கிறார்களா என்ற சமூகப் புரிதல் இப்படக்குழு சார்ந்த எவருக்கும் இல்லாமல் போனது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது.

Writer Jeyarani Slams Seeing Red Short Film Director Shalini Vijayakumar and Vetrimaran For story theft

வரலாற்று அநீதி: என் கதையை படமாக எடுக்கும் முன் அதற்கான அனுமதியை பெறும் நாகரிகத்தையும் நேர்மையையும் கொண்டிருக்க வேண்டும். இங்கு அது நடக்கவில்லை. எனவே, கதைக்கு என் பெயர் கொடு, பணம் கொடு என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த நான் விரும்பவில்லை. ஏனென்றால் அப்படிச் செய்தால் இந்த திரிபுவாதத்துக்கு நானும் துணை போனதாகும். கதைத் திருட்டு என்பது தனிநபர் பிரச்சனை. ஆனால், கதைத் திரிபு என்பது சமூகப் பிரச்சனை, வரலாற்று அநீதி.

மன உளைச்சல்: எனவே, என்னுடைய நிலைப்பாட்டை இங்கே அறிவிக்கிறேன். என் கதையை தன்வயப்படுத்தி திரிபுவாதத்தில் ஈடுபட்டதற்காகவும் அதன் பொருட்டு எனக்கு உண்டாக்கிய மன உளைச்சலுக்காகவும் ஷாலினி விஜயகுமார் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும் ''Seeing Red'' படத்தை இனி எங்கேயும் திரையிடக்கூடாது. அனைத்து தளங்களில் இருந்தும் அப்படத்தை நீக்க வேண்டும். MAMI திரைப்பட விழா குழுவினர் தம் தேர்விலிருந்து இப்படத்தை விலக்கி வைக்க வேண்டும். இதற்கான சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்வேன்.

Writer Jeyarani Slams Seeing Red Short Film Director Shalini Vijayakumar and Vetrimaran For story theft

இரட்டைப் போராட்டம்: இயக்குனர் வெற்றிமாறனுக்கு இத்திரிபுவாதத்தில் உடன்பாடு இருக்காது என்று நான் நம்புகிறேன். ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக ஆக்கப்பூர்வமாக செய்வதற்கு இந்த ஆணாதிக்க, சாதிய சமூகத்தில் எவ்வளவோ வேலைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. அப்படிச் செய்யும் வேலைகளையும் திருடிக் கொண்டும் திரித்துக் கொண்டும் இருப்பீர்களானால் எப்படி வேடிக்கைப் பார்ப்பது? இது எங்களுக்கு வலி மிகுந்த இரட்டைப் போராட்டம் என்பதை சொல்லிக் கொள்கிறேன். நன்றி, உண்மையுள்ள - ஜெயராணி" என பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X