சசிகுமாரின் அயோத்தி கதை திருட்டு பஞ்சாயத்து... இயக்குநர் - எழுத்தாளர் இடையே நடந்தது என்ன?
சென்னை: சசிகுமார் நடித்துள்ள அயோத்தி திரைப்படம் கடந்த வாரம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மந்திரமூர்த்தி இயக்கிய இந்தப் படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதேநேரம், அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் மாதவராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து அயோத்தி படக்குழுவினர் விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில், தற்போது எழுத்தாளர் மாதவராஜ் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சசிகுமாரின் அயோத்தி
சசிகுமார், குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த அயோத்தி திரைப்படம் கடந்த வாரம் 3ம் தேதி வெளியானது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரும் ஒரு குடும்பத்தினர் விபத்தில் சிக்கிக்கொள்ள, அப்போது ஒருவர் உயிரிழக்க நேரிடுகிறது. உயிரிழந்தவரின் சடலத்தை அயோத்தி கொண்டு செல்வதற்கு சசிகுமாரும் புகழும் உதவ முடிவு செய்கின்றனர். அவர்கள் நினைத்தபடி அந்த குடும்பத்தினருக்கு உதவ முடிந்ததா என்பது தான் கதை.

உண்மைச் சம்பவம்
தமிழ்நாட்டில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தை மந்திரமூர்த்தி இயக்கினார். மதம் கடந்த மனிதநேயம் என்பதே இப்படத்தின் மையக் கருவாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். முக்கியமாக அயோத்தி படத்தின் கதையை எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதியதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அயோத்தி கதை தன்னுடையது என எழுத்தாளர்கள் மாதவராஜ், நரன் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இறுதியாக நரன் உட்பட பலரும் மாதவராஜுக்கு ஆதரவாக நின்றனர்.

இயக்குநர் - எழுத்தாளர் பேச்சுவார்த்தை
ஆனாலும், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் இந்த பிரச்சினைக்கு பதில் கூறாமல் அமைதி காத்துவந்தார். இந்நிலையில், அயோத்தி படக்குழு எழுத்தாளர் மாதவராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வந்துள்ளது. அதுகுறித்து எழுத்தாளர் மாதவராஜ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி படத்தின் இயக்குநர் தரப்பிலிருந்து என்னுடன் நேரில் பேச விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. சென்னை சாஸ்திரி பவனில், டெபுடி லேபர் கமிஷனர் முன்பு எனது கிராஜுவிட்டி வழக்கு குறித்த ஹியரிங் இருப்பதால், நான் சென்னைக்கு வர இருப்பதாக தெரிவித்தேன்.

அர்த்தமுள்ள சந்திப்பு
மேலும், அதன்பின்னர் சென்னை வந்ததும், "படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குநர் மந்திரமூர்த்தி, துணை இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோருடன் சந்திப்பு நடந்தது. என்னுடன் வழக்கு சம்பந்தமாக வந்திருந்த எங்கள் வங்கியில் பணிபுரிந்த தொழிற்சங்கப் பொறுப்புகளில் இருந்த, தோழர் விஸ்வநாதன் இருந்தார். நடந்த விஷயங்களை இரு தரப்பிலும் பகிர்ந்து கொண்டோம். தயாரிப்பாளர் மிகுந்த புரிதலோடு பேசியது சந்திப்பை அர்த்தமுள்ளதாகவும், இணக்கமானதாகவும் ஆக்கியது. இந்தப் படம் முக்கியமான, அவசியமான படம் என்று எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது
அதேபோல், இந்தப் படத்திற்காக கடும் உழைப்பை செலுத்தி, களப்பணி ஆற்றியதை இயக்குநர் மந்திரமூர்த்தி விவரித்தார். அவரிடம் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கொடுத்த கதை, நான் 2011ல் தீராத பக்கங்களிலும், Bank Workers Unity பத்திரிக்கையிலும் எழுதிய பதிவிலிருந்து எடுத்து எழுதப்பட்ட கதை என்பது தெரிய வந்தது. அயோத்தி படம் OTT தளத்தில் வெளியாகும்போது, நிஜத்தில் பாதிக்கப்பட்ட வட இந்தியக் குடும்பத்திற்கு உதவிய பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், அதன் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ் பாபு ஆகியோருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

இயக்குநர் உறுதி
அதற்கான ஏற்பாடுகளை செய்து அவர்களுக்கான அங்கீகாரத்தை அளிப்பதாக நம்பிக்கை அளிக்கப்பட்டது. தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும், இயக்குநர் மந்திரமூர்த்திக்கும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன். இந்த பிரச்சினையில் ஆதரவளித்த, துணைநின்ற அத்தனை பேருக்கும் நன்றி. நம்பிக்கைகள் நனவாக வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதனால் அயோத்தி கதை திருட்டு பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











