அவர் அந்த விஷயத்தில் ரொம்ப வீக்.. அவர் முகம் மறந்துவிட்டது.. எழுத்தாளர் சுஜாதா மனைவி இப்படி சொல்லிட்டாங்களே
சென்னை: தமிழ் இலக்கிய உலகத்தில் எழுத்தாளர் சுஜாதா தவிர்க்கவே முடியாதவர். முற்போக்கு சிந்தனையோடும், அறிவியல் சிந்தனையோடும் தன்னுடைய நூல்களை அவர் இயற்றியவர். அதன் காரணமாக அவர் இறந்து 17 வருடங்கள் ஆகியும் இன்றுவரை இலக்கிய உலகத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் உண்மையான சுஜாதாவான அவரது மனைவி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ரங்கராஜன் எழுத்தின் மீது தீராத ஆர்வம் உடையவர். அதன் காரணமாக ஒருபக்கம் படித்து பணியாற்றிக்கொண்டே மறுபக்கம் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தார். ஏற்கனவே ரங்கராஜன் என ஒரு எழுத்தாளர் இருந்ததன் காரணமாக இவர் தனது பெயரை சுஜாதா என்று மாற்றிக்கொண்டார். இது அவரது மனைவி பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்: சுஜாதா இலக்கிய உலகத்துக்குள் வந்த பிறகு அது ஒரு படி முன் நகர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை மையமாக வைத்து ஏகப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறார். அவை அனைத்துமே சுவாரஸ்யம் குறையாமல் அமைந்திருந்தன. மேலும் அவர் தொழில்நுட்பத்தை அதிகம் விரும்பியதால் தன்னுடைய எழுத்தையும் அதற்கு தகுந்தவாறு அப்டேட் செய்துகொண்டே இருந்தார். இதன் காரணமாக அவர் தமிழ் இலக்கிய உலகத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழ்ந்தவர்.

திரைத்துறையில் சுஜாதா: இலக்கிய உலகத்தில் மட்டுமின்றி திரைத்துறையிலும் கோலோச்சியவர் அவர். இவர் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்துதான் காயத்ரி, ப்ரியா உள்ளிட்ட படங்கள் உருவாகின. அதுமட்டுமின்றி விக்ரம் படத்தின் கதையையும் அவர்தான் எழுதியிருந்தார். கதாசிரியராக மட்டுமின்றி வசனகர்த்தாவாகவும் ஜொலித்த அவர் ரோஜா, இந்தியன், திருடா திருடா, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், அந்நியன், பாய்ஸ், சிவாஜி என பல படங்களுக்கு வசனங்கள் எழுதினார்.
வசனங்களும் பங்கு செய்தன: அவர் வசனம் எழுதினால் ஒப்பேத்தாமல் கதைக்கு தேவையானதை மிக அருமையாக எழுதக்கூடியவர். ஒன்றிரண்டு வார்த்தைகளில் வசனங்கள் எழுதினாலும் அவை அனைத்துமே வீரியமிக்கதாக இருக்கும். உதாரணமாக முதல்வன் படத்தில் அர்ஜுன் ரகுவரனை பேட்டி எடுக்கும் சீனை அந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு சென்றது என்றால் அது சுஜாதாவின் வசனங்கள்தான். ஒவ்வொன்றும் அவ்வளவு ஷார்ப்பாக இருக்கும்.
சுஜாதா மனைவி பேட்டி: சுஜாதா உடல்நல குறைவால் கடந்த 2008ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மனைவி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனது கணவரின் அம்மா பெயர் கண்ணம்மா. முதலில் அந்தப் பெயரை தனக்கு வைத்துக்கொள்ளலாம் என்று இருந்தார். ஆனால் அது கொஞ்சம் பழைய பெயராக இருந்ததால் என்னுடைய பெயரான சுஜாதாவை அவர் வைத்துக்கொண்டார். அவரை நான் முதன்முதலில் பார்த்த பிறகு எனது அம்மாவிடம் நான், என்னைவிட அவர் உயரமாக இருக்கிறாரே என்று மட்டும்தான் சொன்னேன்.
முகம் மறந்துவிட்டது: பிறகு எங்கள் திருமணம் நடந்தது. அப்போது ஒருமுறை எனது மாமனார் ரங்கராஜன் வந்திருக்கான் பாரு என்று சொன்னார். நான் உண்மையில் திருமணம் செய்துகொண்ட பிறகு கணவரின் முகத்தை மறந்தே போய்விட்டேன். அதேபோல் எனது கணவர் நிறைய காதல் கதைகள் எழுதுவார். ஆனால் காதல் செய்யவே தெரியாது. முக்கியமாக வீட்டில் பயங்கரமாக கோபப்படுவார். எது எப்படியோ எங்களை நடுத்தெருவில் நிற்க விடாமல் போயிருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











