ஆஸ்கர் இறுதி பட்டியலில் “ரைட்டிங் வித் ஃபயர்“…. இயக்குநரின் உணர்ச்சி பூர்வமான தருணம் !
சென்னை : 94வது ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் சிறந்த ஆவணப்படமாக ரைட்டிங் வித் ஃபயர் தேர்வாகி உள்ளது.
இந்த அறிவிப்பை நேரலையில் பார்த்த அப்படத்தின் இயக்குனர் ரின்டு தாமஸ் உணர்ச்சி மிகுதியால் கண்கலங்கினார்.
மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதிற்காக நாமினேட் செய்யப்பட்ட படங்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வருடத்திற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது.

ஆஸ்கர் விருது
உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியல் நேற்று வெளியான நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் இதில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ரைட்டிங் வித் ஃபயர்
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஆவணப்படங்களுக்கான இறுதி பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரைட்டிங் வித் ஃபயர் என்ற ஆவணப்படம் தேர்வாகியுள்ளது. இந்தியாவில் இருந்து முதல் முறையாக ஒரு ஆவணப்படம் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

139 ஆவணப் படங்கள்
ரின்டு தாமஸ் மற்றும் சுஷ்மிதா கோஷ் இருவரும் இணைந்து ரைட்டிங் வித் ஃபயர் என்ற ஆவணப் படத்தை இயக்கியிருந்தனர். பட்டியலின பெண் பத்திரிகையாளரை பற்றி ஆவணப்படமாக வெளியான இப்படம் உலக முழுவதிலும் இருந்து ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்ட 139 ஆவணப் படங்களிலிருந்து இறுதி 5 படங்களில் ஒரு படமாக தேர்வாகியுள்ளது.

நெகிழ்ந்த ரின்டு தாமஸ்
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஆவணப்படங்களுக்கான இறுதி பட்டியலில் ரைட்டிங் வித் ஃபயர் என்ற ஆவணப்படம் தேர்வான அறிவிப்பை நேரலையில் பார்த்து வந்த ரின்டு தாமஸ் மகிழ்ச்சியில் கண்கலங்கி நெகிழ்ந்து போனார். அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைத்துப் போயினர். இந்த வீடியோவை ரின்டு தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரைட்டிங் வித் ஃபயர் ஆவணப்படம் ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











