ரஜினிக்காக ஒரு நாடகம் உருவாக்கியுள்ளேன்! - 'சகலை' ஒய்ஜி மகேந்திரன்
எண்பதுகளில் பிடிக்கிறதோ பிடிக்கலையோ.. சகித்துக் கொண்டு ஒருவரைப் பார்த்தாக வேண்டியிருந்தது ரஜினி - கமல் படங்களில். அவர் ஒய் ஜி மகேந்திரன். சுருளிராஜனின் திடீர் மறைவால், இந்த இரு பெரும் நட்சத்திர நாயகர்களின் படங்களிலும் ஒய்ஜிதான் பிரதான காமெடியன்!
நல்ல வேளை, கவுண்டர் வருகையால் தப்பித்தது தமிழ் சினிமாவின் நகைச்சுவைப் பகுதி.
ஒய் ஜி மகேந்திரனும், வெகு ஜனங்களுக்கு சம்பந்தமில்லாத நாடகத்தின் பக்கம் ஒதுங்கிவிட்டார். வெளிநாடுகளில் போய் நிறைய நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார்.

சமீப காலமாக நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் ஒய்ஜி மகேந்திரன்.
இந்த நிலையில் தனது நாடகக் குழு மூலம் மீண்டும் பழைய பரீட்சைக்கு நேரமாச்சு நாடகத்தை அரங்கேற்றப் போவதாக நேற்று அறிவித்தார்.
அப்போது அவர் சொன்ன ஒரு தகவல், ரஜினிகாந்த் விரைவில் நாடகத்தில் நடிக்கப் போகிறார் என்பது.
சினிமா பிரபலங்கள் ஏன் நாடகத்தில் நடிக்க தயங்குகிறார்கள் என்ற ஒரு கேள்விக்கு பதிலளித்த ஒய்ஜி மகேந்திரன், "நாடகம் தற்போது திரையுலக பிரபலங்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. நாடகத்தில் பிரபலங்கள் நடிக்காததற்கு காரணம் இங்கு சம்பளம் குறைவு. நாங்கள் எல்லாம் சபாவை நம்பிதான் இருக்கிறோம். இங்கு குறைந்த சம்பளம்தான். சினிமாவில் அதிக சம்பளம் வாங்குவதால், நாடகங்கள் பக்கம் வருவதில்லை.
இந்த நாடகத்தில் கூட முதலில் சந்தானம்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் பிசியாக இருப்பதால் நடிக்க முடியாமல் இருக்கிறது.
ஒருநாள் ரஜினியைச் சந்தித்த போது நாம் ஒரு நாடகத்தை உருவாக்கலாம் என்று கூறினார். அவருக்காக ஒரு கதையை உருவாக்கியுள்ளேன். தற்போது அவர் லிங்கா படத்தில் பிசியாக இருப்பதால் அதை முடித்து விட்டு நடிப்பார் என்று நினைக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











