'யார்றா அந்த பையன் நான்தான் அந்த பையன்' திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: ரசிகர்களின் பெரும் ஆவலுக்கு இடையே, 'யார்றா அந்த பையன் நான்தான் அந்த பையன்' திரைப்படம் 2026 மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பால் ராஜ் இயக்கி, தயாரித்து, 'விஜய்' என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதல், துரோகம், த்ரில்லர் அம்சங்கள் கலந்த இக்கதையில், காயத்ரி ரெமா (ஷாலினி), ஸ்வேதா ஸ்ரீ (தீபிகா), மற்றும் ரவி மரியா (ஊழல் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விஜய்-ஷாலினி திருமண உறவில் விரிசல் கண்ட நிலையில், குடிகார கணவனை இழந்த தீபிகா தனிமையில் வாடுகிறார். இருவரின் வாழ்க்கையும் எதிர்பாராத விதத்தில் இணையும்போது, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு ரகசியக் காதல் விஜய்க்கும் தீபிகாவுக்கும் இடையே மலர்கிறது.

ஆனால், இந்தத் தடை செய்யப்பட்ட காதல் வெகுவிரைவில் பேராபத்தாகிறது. தீபிகா மீது தீராத மோகம் கொண்ட ஊழல் காவல் ஆய்வாளர் சிவகுமாரின் வருகை பெரும் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிகார பலம் கொண்ட அவர், தீபிகாவைத் தன் விருப்பத்திற்கு இணங்க வேட்டையாடத் தொடங்குகிறார்.
நிம்மதியற்ற குடும்ப வாழ்வு, வெளிவர முடியாத காதல் ஒருபுறம்; அதிகார வெறிபிடித்த போலீஸ் அதிகாரியின் கொடூர வேட்டை மறுபுறம். இவ்விரு நெருக்கடிகளுக்கு நடுவே தீபிகா படும் போராட்டமே படத்தின் மையக்கரு. குற்ற உணர்வும் சந்தேகமும் சூழ, ஆபத்திலிருந்து காதலர்கள் தப்பிப்பார்களா? ரகசிய காதலின் உண்மை எவ்வளவு காலம் மறைக்கப்படும்?
இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடி நகரும் திரைக்கதை, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும். ஒளிப்பதிவை உதயகுமார் K மற்றும் இசையை விஜய் பிரபு மேற்கொள்ள, இப்படம் மனித உணர்வுகளின் இருண்ட பக்கங்களையும் அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் தோலுரித்துக் காட்டும் எனச் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 6 அன்று, 'யார்றா அந்த பையன் நான்தான் அந்த பையன்' வெளியீட்டிற்குத் தயாராகிவிட்டது!


Click it and Unblock the Notifications











