'எமனி'ல் இரு எமன்கள்!
"விஜய் ஆண்டனியும், ஜீவா ஷங்கரும் இரண்டு எமதர்ம ராஜாக்கள்" என்று 'எமன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார் விஜய் சேதுபதி
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்திருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் 'எமன்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை 'சத்யம்' திரையரங்கில் நடந்தது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில், விஜய் சேதுபதி, எஸ் ஏ சந்திரசேகர், 'அம்மா கிரியேஷன்ஸ்' டி சிவா, விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், இயக்குநர் ஜீவா ஷங்கர், நடிகர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன் 'எமன்' படத்தின் இசை குறுந்தட்டை வெளியிட, அதைப் பெற்று கொண்டார் விஜய் சேதுபதி.
லைக்கா
"அற்புதமான காட்சிகளும், நெஞ்சை வருடிச் செல்லும் இசையும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். அந்த வகையில், ஒரு தயாரிப்பாளராக எனக்கு கதாநாயகனே இசையமைப்பாளராகவும், இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் கிடைத்திருப்பதை எண்ணி, பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன். 'எமன்' படத்தின் கதை முற்றிலும் விஜய் ஆட்டணிக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். அவரோடு எங்களின் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் கைக்கோர்த்து இருப்பது பெருமையாக இருக்கின்றது," என்றார் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' ராஜு மகாலிங்கம்.
விஜய் ஆன்டனி
"எமன்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த தியாகராஜன் சார் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக எங்களின் 'எமன்' திரைப்படம் ஒவ்வொரு ரசிகரின் எதிர்பார்ப்பையும் முழுவதுமாக பூர்த்தி செய்யும்" என்று நம்பிக்கையுடன் கூறினார் விஜய் ஆண்டனி.
விஜய் சேதுபதி
"முதலில் 'எமன்' படத்தின் கதையை ஜீவா ஷங்கர் என்னிடம் தான் கூறினார், ஆனால் தற்போது அந்த கதைக்கு கனகச்சிதமாக பொருந்தி இருப்பது விஜய் ஆண்டனிதான் என்பதை நினைக்கும் பொழுது அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. முதல் முறையாக இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடனம் ஆடி இருக்கிறார். அதை பார்ப்பதற்காக நான் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன்," என்று உற்சாகமாக கூறினார் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











