Nayanthara: நயனுக்கு மட்டுமில்ல அவரின் படத்திற்கும் புது பஞ்சாயத்து.. அரசாங்கமே அனுப்பிய நோட்டீஸ்!
சென்னை: நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவிலும் மிகவும் முக்கியமான நடிகையாக உள்ளார். இவரது சினிமா வாழ்க்கையைப் பார்த்த ரசிகர்கள் அவரை, லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கின்றனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மகன்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்ததால், படங்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவர் நடித்து வரும் படங்களில் ஒன்று, டாக்ஸிக். கேஜிஎஃப் புகழ் யாஷ் நடிக்கும் இந்தப் படத்தில், நயன் நடிக்கின்றார்.

தற்போது இந்தப் படம் புது சிக்கலில் மாட்டியுள்ளது. அதாவது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள காட்டுப் பகுதியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பின்போது, மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக புகார் அளிக்கப்பட்டு, தற்போது அது தொடர்பாக கர்நாடக மாநில அரசு டாக்ஸிக் படக்குழுவினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நயன்: யாஷ், நயன், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்ஸிக். இந்தப் படத்தினை, கீது மோகன்தாஸ் இயக்கி வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. படத்தின் நாயகன் யாஷ்ஷின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு சார்பில் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டு, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படியான சூழலில் படக்குழுவினர், அதாவது மொத்த படக்குழுவினரும் பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டனர்.

வனத்துறை: அதாவது, படத்தின் படப்பிடிப்பினை நடத்த, கர்நாடக வனத்துறையிடம் உரிய அனுமதி வாங்கி, பெங்களூரை அடுத்துள்ள வனப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு நடந்த போது, படக்குழுவினர், வனத்தில் உரிய அனுமதி இல்லாமல், மரங்களை வெட்டியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ஏற்கனவே வெளியானது. இப்படியான நிலையில் படக்குழுவினர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, இது தொடர்பாக கர்நாடக அரசு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸ்: கர்நாடக அரசின் இந்தக் நோட்டீஸ்க்கு, டாக்ஸிக் படக்குழு என்ன மாதிரியான பதில் அளிக்கவுள்ளார்கள் என்பதைப் பொறுத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே நயனின் ஃபெமி9 நிறுவனம் தொடர்பான நிகழ்ச்சி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது நயன் நடிக்கும் படமும் சிக்கலில் மாட்டியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











