Yash Raj Chopra: பாலிவுட் பிரபலம் யாஷ் சோப்ரா வீட்டில் சோகம்... அதிர்ச்சியில் திரையுலகம்!
மும்பை: பாலிவுட் திரையுலகின் மிக முக்கியமான பிரபலம் யாஷ் ராஜ் சோப்ரா, கடந்த 2012ம் ஆண்டு காலமானார்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் மூலம் பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், யாஷ் ராஜ் சோப்ராவின் மனைவியும் பிரபல பின்னணிப் பாடகியுமான பமீலா சோப்ராவும் இன்று காலமானார்.
பமீலா சோப்ராவின் மறைவு இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாஷ் ராஜ் சோப்ரா மனைவி மறைவு:பாலிவுட்டில் பிரம்மாண்டமான படங்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ். இந்த நிறுவனத்தை உருவாக்கிய யாஷ் ராஜ் சோப்ரா பாலிவுட்டின் மிக முக்கியமான பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2012ம் ஆண்டு காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் ஆதித்யா சோப்ரா யாஷ் ராஜ் பிலிம்ஸை நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில், யாஷ் ராஜ் சோப்ராவின் மனைவி பமீலா சோப்ரா இன்று காலமானார், அவருக்கு வயது 85. இந்தியில் 'கபி கபி' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பிரபலமானவர் பமீலா சோப்ரா. மேலும் தயாரிப்பாளர், கதையாசிரியர் என பன்முக அடையாளங்களுடன் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1970ம் ஆண்டு இவருக்கும் யாஷ் ராஜ் சோப்ராவுக்கும் திருமணம் நடைபெற்றது.
யாஷ் ராஜ் சோப்ரா - பமீலா சோப்ரா தம்பதியினருக்கு ஆதித்யா சோப்ரா, உதய் சோப்ரா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கணவனின் மறைவுக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்தார் பமீலா சோப்ரா. ஆனால், கடந்த 15 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பமீலா, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல்நிலை மிக மோசமாக இருந்ததால் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தான் பமீலா சோப்ராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாம். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் பமீலா சோப்ரா இன்று காலமாகியுள்ளார். இதனையறிந்த பாலிவுட் பிரபலங்கள் பமீலா சோப்ராவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல், பமீலா சோப்ராவின் மறைவு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாஷ் ராஜ் சோப்ரா இயக்குநர், தயாரிப்பாளர் என பாலிவுட்டின் அடையாளமாக வலம் வந்தவர். அதற்கு பின்னணியில் பமீலா சோப்ரா தான் மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளார். தற்போதும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷாருக்கானின் பதான் போன்ற பிரம்மாண்டமான படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தை தற்போது ஆதித்யா சோப்ரா தான் நிர்வகித்து வருகிறார். இவர் நடிகை ராணி முகர்ஜியை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











