ஜன நாயகன் விநியோகஸ்தர்களுக்கு ஜாக்பாட்.. யஷ்ஷின் ‘டாக்ஸிக்’ தமிழ்நாடு ரிலீஸ் கிடைச்சிருக்கே!
சென்னை: நடிகர் யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' திரைப்படத்தின் தமிழக விநியோகம், ரூ. 63 கோடி முன்பண ஒப்பந்தத்துடன் ஒரு புதிய வணிக மைல்கல்லை எட்டியுள்ளது. இது சமீபகால தமிழகத் திரைப்பட வணிகத்தில் மிக முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
இந்த ஒப்பந்தம் படம் மீதான பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் வெளியாகவிருக்கும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக 'டாக்ஸிக்' அமைய உள்ளது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அதிகபட்ச அணுகுமுறையையும், பிராந்திய வலிமையையும் உறுதி செய்ய, சக்திவாய்ந்த விநியோகஸ்தர்களுடன் இணைந்து ஒரு விரிவான வெளியீட்டுத் திட்டத்தை படக்குழு வகுத்துள்ளது. விஜய்யின் ஜன நாயகன் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய வாங்கியிருந்த விநியோகஸ்தர்களுக்கு அதிகபட்சமாக முன்னுரிமை வழங்கியிருக்கிறது கேவிஎன் நிறுவனம்.
சென்னை மாநகரப் பகுதியை ஸ்வரூப் ரெட்டியின் திங்க் ஸ்டுடியோஸ் கையாள்கிறது. செங்கல்பட்டு விநியோகத்தை டிரைடண்ட் ரவியின் ஒயிட் நைட்ஸ் மேற்கொள்கிறது. கோயம்புத்தூர், வடக்கு-தென் ஆற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகியவற்றை எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன் மேற்பார்வையிடுவார்.
மதுரை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், சேலம் ஆகிய முக்கியப் பகுதிகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிர்வகிப்பார். இந்த பிராந்திய விநியோக முறை, மாநிலம் முழுவதும் சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிப்ளக்ஸ் இரண்டிலும் வலுவான திரையிடலை நோக்கமாகக் கொண்டது.

இந்தக் கூட்டுறவு குறித்து தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "'டாக்ஸிக்' சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியப் படங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் யாஷ் மீதுள்ள அன்பும், ஆதரவும் தனிச்சிறப்பானது; ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொண்ட விதம் உண்மையிலேயே சிறப்பு" எனக் குறிப்பிட்டனர்.
அவர்கள் மேலும், "இத்தகைய லட்சியம் கொண்ட படத்திற்கான விநியோகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. இது எங்களுக்குப் பெரிய வெளியீடு மட்டுமல்ல, இந்தியத் திரையுலகின் மிக அதிக எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுடன் கைகோர்ப்பது உற்சாகமானது" எனப் பகர்ந்தனர்.
'கே.ஜி.எஃப்: பார்ட் 2' படத்தின் வெற்றியும், தமிழ்நாட்டில் யஷ்ஷின் பெரும் புகழும் இந்த ஒப்பந்தத்தின் அளவுக்கான காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ் ரசிகர்கள் யாஷை தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டு, அவர் மீது அன்பைப் பொழிந்துள்ளனர். இது எல்லையைக் கடந்த அரிய பிணைப்பாகும்.
யஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து எழுதியுள்ள 'டாக்ஸிக்' படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் பதிப்புகளாக வெளியாகிறது. KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இதைத் தயாரிக்கின்றன.
'டாக்ஸிக்' திரைப்படம் மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications