நடிகைகள் கைது, ரெய்டு, விசாரணை.. 2020-ல் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய போதை பொருள் வழக்கு!
சென்னை: இந்த வருடம் சினிமா துறைக்கு ஷாக் கொடுத்த விஷயங்களில் ஒன்று போதைப் பொருள் பழக்கம் தொடர்பான கைதுகள்!
'சினிமாவில் போதைப் பழக்கம் சாதாரண விஷயம்' என்பது மக்களிடம் இயல்பாகவே இருக்கும் கருத்து.
அதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த வருடம் அமைந்தது போதைப் பொருள் தொடர்பாக சினிமா நடிகர், நடிகைகளின் கைது.

ரியா சக்கரவர்த்தி
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து நடந்த பரபரப்பான புகார்களில் அவர் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தியை விசாரித்தது போலீஸ். பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்தபோது அவர்களின் வாட்ஸ் அப் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

போதைப் பொருள்
அப்போது அவர்களுக்கு போதைப் பொருள்களை விற்கும் கும்பலுடன் தொடர்பு இருந்ததும் போதைப் பொருள் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது. இதனால் அவர், அவர் சகோதரர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். பிறகு அடுத்தடுத்து நடந்த விசாரணையில், காமெடி நடிகை பார்தி சிங், தயாரிப்பாளர் ஒருவர் மனைவி ஆகியோர் கைதாகினர்.

தீபிகா படுகோன்
பல சினிமா பிரபலங்களின் வீடுகளில் சோதனை நடந்தது. அதில் ஒன்று நடிகர் அர்ஜூன் ராம்பாலின் வீடு மற்றும் அலுவலகம். அடுத்து நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர். பாலிவுட்டில் இப்படி என்றால் சாண்டல்வுட்டிலும் போதைப் பொருள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திரஜித் லங்கேஷ்
கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கூறியிருந்தார். போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார்.

ராகிணி திவேதி
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்கள் நண்பர்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன். சமீபத்தில் சஞ்சனாவுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கு இன்னும் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











