Year Ender 2023: முன்னணி இயக்குநர்கள் பாராட்டிய படங்கள்.. 2023ல் அதிக ஓட்டு எந்த மூவிக்கு தெரியுமா?
சென்னை: 2023ம் ஆண்டு மினிமம் பட்ஜெட்டில் வெளியான சில படங்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் முன்னணி இயக்குநர்களிடம் அதிக பாராட்டைப் பெற்ற படங்களின் லிஸ்ட்டை தற்போது பார்க்கலாம்.
முன்னணி இயக்குநர்கள் பாராட்டிய சிறந்த படங்கள்
2023ல் வெளியான சின்ன பட்ஜெட் படங்கள் சில ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்தப் படங்கள் முன்னணி இயக்குநர்களிடமும் பாராட்டைப் பெற்றன. இதில் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் பெரும்பாலான முன்னணி இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கணேஷ் கே பாபு இயக்கிய இந்தப் படத்தை அமீர், வெற்றிமாறன், ஜெயம் ராஜா, கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மணிகண்டன் நடித்திருந்த குட் நைட் படத்துக்கும் முன்னணி இயக்குநர்களிடம் இருந்து நல்ல பாராட்டுகள் கிடைத்தன. விநாயக் சந்திரசேகரன் இயக்கிய இந்தப் படத்தில் மணிகண்டனுடன் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஃபீல்குட் மூவியான குட் நைட் ஓடிடி ரசிகர்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை வெற்றிமாறன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ், அமீர் உட்பட மேலும் பல இயக்குநர்கள் பாராட்டினர்.
அதேபோல், சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படத்துக்கும் முன்னணி இயக்குநர்களிடம் பாராட்டு கிடைத்தது. மந்திரமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமாருடன் குக் வித் கோமாளி புகழ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்திருந்தனர். மத நல்லிணக்கத்தை பின்னணியாக வைத்து உருவான அயோத்தி படத்துக்கும் முன்னணி இயக்குநர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தொழில் படமும் முன்னணி இயக்குநர்களை அதிகம் பேச வைத்தது. விக்னேஷ் ராஜா இயக்கிய இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் ஜானரில் மிரட்டியிருந்தது. மினிமம் பட்ஜெட்டில் வெளியான பல படங்கள் ஃபீல் குட் மூவியாக இருந்தன. ஆனால் போர் தொழில் மட்டும் வித்தியாசமான மேக்கிங்கில் அசரடித்தது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ், ஜெயம் ராஜா, நிதிலன், மிஷ்கின் ஆகியோர் பாராட்டியிருந்தனர்.
முக்கியமாக சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றது. அருண்குமார் இயக்கிய இந்தப் படத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள், குட் டச், பேட் டச் குறித்து உருவாகியிருந்த இந்தப் படத்துக்கும் முன்னணி இயக்குநர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் கவினின் டாடா திரைப்படம் தான் அதிக ஓட்டுகளுடன் முன்னணியில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











