Top 10 Movies: கோட் முதல் டிமான்டி காலனி 2 வரை.. ஏஜிஎஸ் சினிமாவில் டாப் 10 இடம் பிடித்த படங்கள்!
சென்னை: இந்த 2024ம் ஆண்டு ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளன. சில பெரிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தவித்த நிலைமையையும் ரசிகர்கள் நன்றாகவே கண்டுணர்ந்தனர். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான கோட் திரைப்படம் முதல் டிமான்ட்டி காலனி 2 வரை முதல் 10 இடங்களை பிடித்துள்ள பட்டியலை தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் லைன் கட்டி வெளியாகின. அஜித் குமார் மற்றும் சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் தான் இந்த ஆண்டு வெளியாகவே இல்லை.

மலையாள படங்களும் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபீஸில் சக்கைப் போடு போட்டன. 1600 கோடி வசூல் செய்த புஷ்பா 2 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தாலும் அந்த படத்தை கோலிவுட் ரசிகர்கள் கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்பது இவர்கள் வெளியிட்டுள்ள டாப் 10 பட்டியலை பார்த்தாலே தெரிகிறது என்கின்றனர்.
10. டிமான்ட்டி காலனி 2: கோப்ரா படத்தின் தோல்விக்குப் பிறகு அஜய் ஞானமுத்து மீண்டும் அருள்நிதியை வைத்து டிமான்ட்டி காலனி படத்தை பண்ணலாம் என அதன் பார்ட் 2வை பக்காவாக எடுத்து ரசிகர்களை பயமுறுத்தினார். இந்த ஆண்டு பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ரத்னம், இந்தியன் 2 படங்கள் சொதப்பிய நிலையில், டிமான்ட்டி காலனி 2 படம் அவருக்கும் வெற்றிப் படமாக அமைந்தது. ஏஜிஎஸ் தியேட்டரில் அதிக வசூலை ஈட்டி 10வது இடத்தை இந்த ஆண்டு இந்த படம் பிடித்துள்ளது.

9. அயலான்: இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில், ஏஜிஎஸ் தியேட்டரில் அதிக வசூலை ஈட்டி அயலான் திரைப்படம் 9வது இடத்தை பிடித்திருக்கிறது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் படமாக வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். ஏலியனுக்கு சித்தார்த் குரல் கொடுத்திருந்தார்.

8. மகாராஜா: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய கன்டென்ட் மற்றும் கலெக்ஷன் படமாக அமைந்தது. ஏஜிஎஸ் தியேட்டரில் 8வது இடத்தை விஜய் சேதுபதியின் மகாராஜா பிடித்துள்ளது. நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், பிக் பாஸ் சாச்சனா, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

7. இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வசூலில் சொதப்பினாலும் ஏஜிஎஸ் சினிமாஸில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

6. ராயன்: தனுஷ் இயக்கி நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படம் 6வது இடத்தை பிடித்துள்ளது. எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் ராவான ஆக்ஷன் படமாக வெளியாகி வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

5. அரண்மனை 4: சுந்தர். சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டு அதிரிபுதிரி ஹிட் அடித்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவைத்தது. தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். அரண்மனை 3 ஃபிளாப் ஆன நிலையில், அரண்மனை 4 சுந்தர். சிக்கு கம்பேக் படமாக மாறியது.

4. வேட்டையன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இந்த ஆண்டு ஏஜிஎஸ் சினிமாஸ் டாப் 10 பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். நல்ல கருத்துள்ள படமாக அமைந்த இந்த படம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது.

3. மஞ்சுமெல் பாய்ஸ்: மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் செம சூப்பராக வசூல் வேட்டை நடத்தியது. ஏஜிஎஸ் சினிமாஸுக்கு அதிக லாபத்தை பெற்றுத் தந்த இந்த படம் 3வது இடத்தை பிடித்துள்ளது. குணா படத்தின் "கண்மணி அன்போடு காதலன்" பாடல் மீண்டும் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியது.

2. அமரன்: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி 350 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்த அமரன் திரைப்படம் டாப் 10 பட்டியலில் 2வது இடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளது. துப்பாக்கியை சூப்பராக பிடித்து சிவகார்த்திகேயன் மாஸ் காட்டி பாக்ஸ் ஆபிஸ் டானாக மாறிவிட்டார்.

முதலிடத்தில் கோட்: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் 450 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டிய நிலையில், ஏஜிஎஸ் சினிமாஸில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. கங்குவா, வாழை, லப்பர் பந்து, புஷ்பா 2 உள்ளிட்ட படங்கள் ஏஜிஎஸ் டாப் 10ல் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











