Year Ender 2024.. தமிழில் சொதப்பிய பெரிய பட்ஜெட் படங்கள்.. என்ன காரணம்?.. மோசமான வருடமா?
சென்னை: தமிழ் சினிமாவில் 2024ஆம் ஆண்டு ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகின. பெரிய ஹீரோக்களின் படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டோடு உருவாகின. அந்த பட்ஜெட்டுகளும் அந்தப் படங்களின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழ காரணமாக அமைந்தன. ஆனால் அந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தனவா என்று கேட்டால் இல்லை என்பதுதான் கள எதார்த்தம். அந்தவகையில் இந்த வருடம் சொதப்பிய பெரிய பட்ஜெட் படங்கள் குறித்து பார்க்கலாம்.
கோலிவுட்டில் 2024ஆம் ஆண்டு பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒன்றும் குறைவில்லாமல்தான் இருந்தன. பெரிய ஹீரோக்களை வைத்து பெரிய பட தயாரிப்பு நிறுவனங்கள் பணத்தை தண்ணீராய் செலவழித்து படங்களை தயார் செய்தன. ஆனால் அவற்றில் எந்த ஒரு படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ஆசையையும் துளி அளவுக்கூட திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோரின் படங்களேகூட மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தன.

இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த இந்திய படம் கல்ட் கிளாசிக் படம். இன்றுவரை அந்தப் படம் கொண்டாடப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கினார்கள். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கொரோனா வைரஸ் உள்ளிட்ட காரணங்களால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பிறகு ஒருவழியாக படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இந்த வருடம் படம் ரிலீஸானது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்தது.
ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக ஷங்கரின் மேக்கிங் சுத்தமாக எடுபடவில்லை. மேலும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான காரணங்களில் இசையும், வர்ம கலையும். ஆனால் இரண்டாவது பாகத்தில் அந்த இரண்டுமே ஒழுங்காக இல்லை. வர்ம கலையை என்னமோ மாயாஜாலம் மாதிரி உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஓபனாகவே கூறினார்கள். அதேபோல் படத்தில் இருந்த வசனங்களும் எடுபடவில்லை. இப்படி ஏகப்பட்ட ஓட்டைகளோடு வந்த இந்தியன் லைகா நிறுவனத்தின் முதலுக்கு மோசம் வைத்துவிட்டே சென்றது.
வேட்டையன்: ஜெய்பீம் படத்தை இயக்கி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் த.செ.ஞானவேல். அந்தப் படத்துக்கு பிறகு அவர் ரஜினிகாந்த்துடன் இணைகிறார் என்று அறிவிப்பு வெளியானதும் ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆச்சரியப்பட்டது. ரஜினிகாந்த்தை ஞானவேல் எப்படி ஹேண்டில் செய்யப்போகிறார்; என்ன மாதிரியான படத்தை அவர் கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால் வேட்டையன் படமோ எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை.
முக்கியமாக இந்தப் படம் ரஜினி படம் மாதிரியும் இல்லை ஞானவேல் படம் மாதிரியும் இல்லை; ரஜினிக்காக சில விஷயங்களில் ஞானவேல் சமரசம் செய்திருக்கிறார். அதனை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ரசிகர்கள் கூறினார்கள். அதேசமயம் வழக்கம்போல் ரஜினிகாந்த்தின் நடிப்பை கொண்டாடவும் தவறவில்லை. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறாமல் சுமார் வெற்றியை பெற்றாலும்; போட்ட பணத்தை விட அதிகம் எடுத்துவிடலாம் என்று எதிர்பார்த்திருந்த லைகாவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.
GOAT: வெங்கட் பிரபுவின் இயக்கம் என்றாலே அதில் ஏதேனும் வித்தியாசம் இருக்கும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. அதன்படியே அவரது முந்தைய படங்களும் இருந்தன. அவர் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் GOAT படத்தை இயக்கினார். முதன்முறையாக விஜய்யுடன் அவர் இணைவதால் அஜித்துக்கு எப்படி மங்காத்தா என்ற ப்ளாக் பஸ்டரை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் கொடுக்க வேண்டுமென்பதுதான் தளபதியுடைய ரசிகர்களின் வேண்டுதலாக இருந்தது.
ஆனால் நடந்ததோ வேறு. டபுள் ஆக்ஷனாக விஜய்யை நடிக்க வைத்தார். டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். குறிப்பாக விஜய்யை வில்லத்தனத்தில் மிரட்ட வைத்திருந்தார். இருப்பினும் படத்தின் கதையிலும், திரைக்கதையிலும் கோட்டை விட்டுவிட்டார் என்றுதான் பெரும்பாலானோரின் விமர்சனமாக இருந்தது. அரத பழசான கதைக்கும், திரைக்கதைக்குமா இப்படி பட்ஜெட்டை கொட்டியது ஏஜிஎஸ் என்று திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்தன. அந்த நிறுவனத்துக்கு நஷ்டம் வராவிட்டாலும் பெருத்த லாபத்தை அந்நிறுவனத்தால் எடுக்க முடியவில்லை.
ராயன்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 50ஆவது படமாக உருவானது ராயன். அவரே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். இந்தப் படத்துக்கு அவ்வளவு பெரிய பட்ஜெட் எதுவும் இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்க தொகையை செலவழித்தது சன் பிக்சர்ஸ். ஆனால் வானைத்தப்போல, வடசென்னை போன்ற திரைப்படங்களிலிருந்து கதையையும், திரைக்கதையையும் தனுஷ் எடுத்து ராயன் படத்தை செய்திருக்கிறார் என்று சொல்லி ரசிகர்கள் கிண்டலடித்தனர். ஆகமொத்தம் இந்தப் படத்தில் போட்ட பணத்தையே சன் பிக்சர்ஸால் மீண்டும் எடுக்க முடியவில்லை என்றே கருத்து நிலவிவருகிறது.
கங்குவா: ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்த கங்குவா படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தார் ஞானவேல் ராஜா. இந்தப் படம் 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்றும்; அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்றும் ஞானவேல் ராஜாவும், சூர்யாவும் ப்ரோமோஷன்களில் இஷ்டத்துக்கு அடித்துவிட்டனர். அந்த எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள்.
படத்தை பார்த்த ரசிகர்களுக்கு உச்சக்கட்ட ஷாக். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பல பல கிரிஞ்ச் டயலாக்குகள், காட்சிகள் இடம்பெற்றுவிட்டதாகவும்; இசையிலோ, மேக்கிங்கிலோ, திரைக்கதையிலோ எதிலுமே ஒன்றுமே இல்லை. இந்தப் படத்துக்கா இவ்வளவு பில்ட் அப் என்று வெளுத்துவிட்டனர் ரசிகர்கள். முக்கியமாக 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று கூறப்பட்ட கங்குவா 200 கோடி ரூபாயைக்கூட தொடவில்லை என்பதுதான் சோகமான விஷயம். இப்படி பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் படுகுழியில் விழுந்து 2024ஆம் ஆண்டை கோலிவுட்டுக்கு சோகமான ஆண்டாக மாற்றியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











