Year ender 2024: 2024ம் ஆண்டில் மலையாள சினிமா.. பெரும் நஷ்டம் என கேரள தயாரிப்பாளர் சங்கம் வேதனை!
சென்னை: 2024ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் உள்ளோம். இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. இந்த ஆண்டு அதிகமான சந்தோஷங்களையும் அதேபோல அதிகமான வேதனைகளையும் கொடுத்துள்ளது. ஒரு வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு குடிபோகும் மனநிலையை தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு புதிய சந்தோஷங்களை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
2024ம் ஆண்டு திரைத்துறையிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பல லோ பட்ஜெட் படங்கள் வசூல் வேட்டை நடத்திய நிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள் ரசிகர்களை கவர முடியாமல், காரணத்தையும் தெரிந்துக் கொள்ள முடியாமல் திருதிருவென முழித்ததையும் இந்த ஆண்டில் பார்க்க முடிந்தது.

எண்ட் கார்ட் போடும் 2024: 2024ம் ஆண்டு நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரு தினங்களில் இந்த ஆண்டு எண்ட் கார்ட் போடவுள்ள நிலையில், புத்தாண்டை வரவேற்கும் குஷி அனைவரிடமும் காணப்படுகிறது. ஆயினும் 2024ம் ஆண்டு பல தாக்கங்களை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு இதற்குள் முடிந்துவிட்டதா என்ற மனநிலையையும் மக்கள் எதிர்கொண்டுதான் வருகின்றனர். இந்த ஆண்டு சினிமாவில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. வழக்கம்போல சிறப்பான கதைக்களத்தால் மட்டுமே ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க முடியும் என்பதை இந்த ஆண்டும் சிறப்பாகவே நிரூபித்துள்ளது.
சிறப்பான ஆண்டு: ஆயினும் இமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்கி பல நடிகர்கள், டெபாசிட் இழந்த வேட்பாளர் போல முழி பிதுங்கி நின்றதை இந்த ஆண்டு காட்சிப்படுததியது. தமிழில் பல லோ பட்ஜெட் படங்கள் வெளியாகி சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. பல புதிய இயக்குநர்கள், நடிகர்கள் அதிகமான கவனத்தை பெற்றனர். குறிப்பாக லப்பர் பந்து, அமரன் போனற் படங்கள் இந்த ஆண்டில் மிகச்சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளன. ரஜினிகாந்த், விஜய் படங்களும் இந்த ஆண்டில் வெளியான நிலையில், படங்களுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருந்தபோதிலும் வசூலில் இந்தப் படங்கள் சிறப்பாகவே அமைந்தன.
கவனத்தை பெற்ற மலையாள படங்கள்: இதனிடையே மலையாளத்தில் இந்த ஆண்டு சிறப்பான பல படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளன. இந்தப் படங்கள் தமிழிலும் வெளியாகி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இங்கும் வெற்றிப்படமாக மாறின. அந்த வகையில் மலையாளத்தில் இந்த ஆண்டில் வெளியான மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன், பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சுமல் பாய்ஸ், ஆடுஜீவிதம், தலைவன், உள்ளொழுக்கு, லெவல் கிராஸ், கிஷ்கிந்தா காண்டம், ஆவேஷம் போனற் படங்கள் மிக சிறப்பான வரவேற்பையும் வசூலையும் இந்த ஆண்டில் குவித்துள்ளன.
மலையாள சினிமாவில் பெரும் நஷ்டம்: ஆயினும் இந்த 2024ம் ஆண்டில் மலையாள சினிமாவிற்கு 700 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கேரள தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மலையாளத்தில் 199 படங்கள் வெளியானதாகவும் அவற்றில் 26 படங்கள் மட்டுமே ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்களின் தயாரிப்பு செலவு 1000 கோடி ரூபாய்களை தாண்டிய நிலையில் இந்தப் படத்தின் மூலம் 350 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்துள்ளதாகவும் கேரள தயாரிப்பாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











