விஜய் படமும் அந்த மலையாள படமும் வரலைன்னா.. சம்பளமே கொடுத்திருக்க முடியாது.. தியேட்டர் ஓனர்கள் பளிச்!
சென்னை: பொங்கலுக்கு விஜய் மற்றும் அஜித் படங்கள் வரவில்லை என்றால் தியேட்டர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை இந்த ஆண்டு தியேட்டர் ஓனர்கள் நன்றாகவே உணர்ந்துக் கொண்டனர். தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வரிசைக் கட்டி வெளியான நிலையில், எந்தப் படமும் பெரிதாக ஓடவில்லை.
பிப்ரவரி மாதம் வெளியான லால் சலாம் படமும் மண்ணை கவ்வ தியேட்டர்கள் எல்லாம் திடீரென கே டிவியாக மாறும் நிலை உருவானது. கமலா தியேட்டரில் ரீ ரிலீஸ் படங்களை வந்து பாருங்க என கூவிக் கூவி ரசிகர்களை ஒரு சில நாட்களாவது தியேட்டருக்கு வரவழைத்தனர்.

பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டாலும் நடிகர் விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் படம் தான் தியேட்டர் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு லாபத்தை கொடுத்ததாக தியேட்டர் ஓனர்கள் சமீபத்தில் நடைபெற்ற ரவுண்ட் டேபிள் 2024 கலந்துரையாடலின் போது கூறினர். மேலும், அந்த மலையாள பிளாக்பஸ்டர் படம் தான் தமிழ் சினிமாவை காப்பாற்றியது என்றும் கூறியுள்ளனர்.
கில்லி ரீ ரிலீஸ்: விஜய்யின் கோட் படம் உருவாகிக் கொண்டிருந்த நிலையில், அந்த படம் செப்டம்பர் மாதம் தான் வரும் சம்மருக்கே படங்கள் பெரிதாக இல்லையே என தியேட்டர் ஓனர்கள் கவலையுடன் இருந்த நிலையில், விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பில் வெளியான கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியது. தியேட்டர்களை 2கே மற்றும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் சும்மா தெறிக்கவிட்டனர்.
சம்பளம் கொடுக்க உதவியது: கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகவில்லை என்றால் அப்போதிருந்த சூழலுக்கு தியேட்டர் ஊழியர்களுக்கு சம்பளமே கொடுத்திருக்க முடியாது என ரோகிணி தியேட்டர் மற்றும் வெற்றி தியேட்டர் ஓனர்கள் கூறியுள்ளனர். விஜய் நடித்த படங்களில் அடுத்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரீ ரிலீஸ் படம் என்றால் எதுவாக இருக்கும் என்கிற கேள்விக்கு சச்சின் படம் போட்டால் நிச்சயம் கலெக்ஷன் அள்ளும். அப்போது சந்திரமுகியுடன் படம் வந்ததால் பெரிதாக ஓடவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மஞ்சுமெல் பாய்ஸ்: தமிழ் சினிமா கவிழ்ந்துக் கிடக்கும் போது மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களை வாழ வைத்தது. கேரளாவை விட தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் நல்ல கலெக்ஷனை அந்த படம் அள்ளியது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளனர்.
தேவையில்லாத பார்ட் 2 ஆணி: புஷ்பா 2 சரியான பார்ட் 2 படம். தெலுங்கில் பார்ட் 2 படங்கள் வெளியானால் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கின்றன. தமிழில் வெளியான சண்டக்கோழி 2, சாமி 2, இந்தியன் 2, சூது கவ்வும் 2 உள்ளிட்ட படங்கள் தேவையில்லாத ஆணியே என்றும் தியேட்டர் ஓனர்கள் ஓபனாகவே பொளந்துக் கட்டியுள்ளனர். லப்பர் பந்து படமெல்லாம் ஒரு ஷோ கூட ஓடாது என நினைத்தோம். ஆனால், நைட் ஷோவுக்கு குவிந்த கூட்டம் தொடர்ந்து அதிகரித்து மிகப்பெரிய லாபத்தை அந்த படம் கொடுத்தது என இந்த ஆண்டு வெற்றிப் பெற்ற படங்கள் குறித்து பேசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











