Year Ender 2024: க...அஜித்தே முதல் கடைசி படம் T-69 வரை.. தமிழ் சினிமாவைக் கலக்கிய டாப் 10 வார்த்தைகள்
சென்னை: ஆண்டு இறுதிக்கு வந்துவிட்டாலே, அந்த ஆண்டு முழுவதும் நாம் என்ன செய்தோம் என்பதை திரும்பிப்பார்ப்பது பலரது வழக்கமாக உள்ளது. அதேபோல் இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் 241 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இது இல்லாமல், 100க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில் தமிழ் சினிமாவை இந்த ஆண்டு கலக்கிய டாப் 10 சொற்கள், வார்த்தைகள் வசனங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
1. விடாமுயற்சி & க.. அஜித்தே: இதில் முதல் இடத்தில் இருப்பது அஜித் நடிப்பில் உருவாகி வரும் தைப்பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள விடாமுயற்சி படம். மற்றொன்று, அஜித் ரசிகர்கள் எங்கு கூடினலும் கடவுளே அஜித்தே என முழங்கி வந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பரவ, உடனே அஜித் அறிக்கை விட்டு தன்னை அஜித் என அழைத்தால் போதும் எனக் கூறினார்.

2.மனசுலாயோ & டிஸ்கோ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தின் பாடல்தான் மனசுலாயோ. இந்தப் பாடல் அனிருத் இசையில் வெளியானது. பாடல் செம ஹிட் அடித்தது. அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் டைட்டில் சாங்கில் வந்த டிஸ்கோ என்ற சொல்லும் டாட் டிரெண்டிங்கில் இருந்துள்ளது.

3. தாத்தா வராரு: இது, இந்தியன் 2 படத்தில் இடம் பெற்ற தாத்தா வராரு பாடலின் முதல் சொற்கள்தான். கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இல்லாமல், விமர்சன ரீதியாகவும் தோல்விப்படமாக மாறியது. இந்தப் படத்திற்கும் அனிருத்தான் இசை அமைத்தார்.

4. உசுரே நீதானே: தனுஷ் தானே இயக்கி நடித்த தனது 50வது படமான ராயன் படத்தில் இடம் பெற்ற பாடலான அடங்காத அசுரன் நான் என்ற பாடலின் மத்தியில் வரும் ' உசுரே நீதானே' வரிகள், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் உருகவைத்துவிட்டது.

5. விவாகரத்து: பிரபலங்களின் விவாகரத்து இந்த ஆண்டு அதிகம் நடைபெற்றுள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜி.வி. பிரகாஷ் குமார் - சைந்தவி, ஜெயம் ரவி - ஆர்த்தி, ஏ.ஆர். ரஹ்மான் -சாய்ரா பானு ஆகியோர் இந்த ஆண்டு விவாகரத்து செய்துள்ளனர். இதனால், விவாகரத்து என்ற சொல்லும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்றுள்ளது.
6. கெத்து - அன்பு: தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள்தான் கெத்து - அன்பு. படத்தின் க்ளைமேக்ஸில் திரைமொழியில் அன்புதான் கெத்து எனக் கூறியிருப்பார் இயக்குநர். படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது.

7. கங்குவா ஒரு குழந்தை: இந்த ஆண்டில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படம் கங்குவா. கங்குவா படத்தின் புரோமோசனின் போது, சூர்யா அதிகம் பயன்படுத்திய வார்த்தைகளில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட வார்த்தை இதுதான். இதுமட்டும் இல்லாமல், கங்குவா படத்தை சூர்யா, நெருப்பு மாதிரி ஒரு படம் வந்துகொண்டு உள்ளது எனவும் கூறினார்.

8. சேட்டா - ஓய் மம்மூட்டி: தீபாவளிக்கு ரிலீஸான தமிழ் படங்களில் பெரும் ஹிட் அடித்த படம், அமரன். இந்தப் படத்தில் இடம் பெற்ற காதல் காட்சிகளில், சிவகார்த்திகேயனை சாய் பல்லவி சேட்டா என்றும், சாய் பல்லவியை சிவகார்த்திகேயன் ஓய் மம்மூட்டி எனவும் அழைத்துக்கொள்வார்கள். இவை, இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆனது.

9. தோழர்: கடந்த 20ஆம் தேதி ரிலீஸ் ஆன விடுதலை பாகம் இரண்டு படத்தில் பயன்படுத்திய தோழர் எனும் சொல், இன்றைக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, டாப் 10 வார்த்தைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

10. கடைசி படம் T - 69: சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, முழுநேர அரசியலில் கால் வைக்கவுள்ள நடிகர் விஜய் தனது கடைசி படமான T-69 படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும்போது T-69 இந்த சொல் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆனது.



Click it and Unblock the Notifications











