365 நாளில் 250 படம் வந்தா எப்படி?.. 4000 கோடியில் இருந்து 2600 கோடிக்கு சரிந்த தமிழ் சினிமா பிசினஸ்.. ஏன்?
சென்னை: ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் மட்டுமே 250 படங்கள் வெளியானால் ரசிகர்கள் எப்படி அனைத்து படங்களையும் தியேட்டருக்குச் சென்று பார்ப்பார்கள் என்கிற சிம்பிள் லாஜிக் இல்லாமல் தமிழ் சினிமா பிசினஸ் மைண்டில் மட்டுமே வேலை செய்து வருவதால் தான் 20 சதவீத படங்கள் மட்டுமே தப்பிக்கின்றன.
மீதமுள்ள 80 சதவீத படங்கள் தோல்வியை தழுவியதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கலையாக இருந்த சினிமா இன்று வருடம் முழுவதும் படங்களை உற்பத்தி செய்யும் எந்திரமாகவும் வணிக தளமாகவும் மாறி நிற்கும் நிலையில் இயல்பாகவே மக்கள் தினமும் வேலைக்கு செல்வார்களா? அல்லது இவர்கள் தயாரிக்கும் படங்களை பார்க்கச் செல்வார்களா? என்கிற லாஜிக் கேள்வி எழத்தான் செய்கிறது.

எனக்கு எப்படியாவது தியேட்டர் கொடுங்க என மாஸ்டர் மகேந்திரன் கெஞ்சும் வீடியோவையும் பார்க்க முடிகிறது. ஆனால், தியேட்டர்கள் கொடுப்பதில் பிரச்சனை இல்லை. படம் ஓடும் என்றால் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்கிற குரல் தான் அதிகமாக ஒலிக்கிறது.
4000 கோடியில் இருந்து 2600 கோடியாக குறைந்த வசூல்: கடந்த 2023ம் ஆண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்கள் தலா 600 கோடி வசூலை அள்ளிய நிலையில், தமிழ் சினிமாவின் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸ் வசூல் 4000 கோடியை எட்டியது. ஆனால், கடந்த 2024ம் ஆண்டு அந்த வசூல் 3000 கோடியாக குறைந்த நிலையில், இந்த ஆண்டு வெறும் 2600 கோடி தான் வசூல் வந்துள்ளதாக தனஞ்செயன் கூறியுள்ளார்.

ஏமாற்றிய உச்ச நடிகர்கள்: ரஜினிகாந்தின் கூலி, கமல்ஹாசனின் தக் லைஃப், சூர்யாவின் ரெட்ரோ, அஜித் குமாரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவுமே பெரிதாக ஓடாத நிலையில் தான் இந்த ஆண்டு வசூல் பெருமளவில் பாதித்துள்ளதாக கூறுகின்றனர். 20 சதவீதம் லாபத்தைக் கொடுத்த படங்களே சுமாராக இருந்த நிலையில், மீதமுள்ள 80 சதவீதம் தோல்விப் படங்களை தயாரித்தவர்களின் நிலை என்னவாகி இருக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

மக்கள் பாவமில்லையா?: தமிழ் சினிமாவின் வளர்ச்சி அடிபட்டு விட்டது என சினிமா நிபுணர்கள் புலம்பும் நிலையில், மக்களை பற்றி யாருமே யோசிப்பதில்லை. ஒரு வருஷத்துக்கு 100 நல்ல படங்களை கொடுத்தாலே அதில், 20 முதல் 40 படங்கள் வரை சாதாரண மக்கள் பார்ப்பது அரிதாகி விட்டது. ஓடிடியின் வருகையால், வீட்டில் இருந்தே படங்களை பாப்கார்ன், பார்க்கிங் செலவு இல்லாமல் மக்கள் பார்க்க முடிகிற நிலையில், தான் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறையத் தொடங்கியிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் தப்பிக்க என்ன வழி?: சினிமா என்பது மக்களை பொறுத்தவரையில் ஒரு என்டர்டெயின்மென்ட் தான் பொங்கல், புத்தாண்டு, தீபாவளிக்கு என பண்டிகை நாட்களில் குடும்பமாக போய் பார்ப்பார்கள். ஞாயிறு விடுமுறையை கொண்டாடவும் பிறந்தநாள், திருமண நாள் என சிறப்பு நாட்களை கொண்டாடவும் செல்கின்றனர். விட்டா வருஷத்துக்கு 365 படம் ரிலீஸ் செய்துவிட்டு மக்கள் மீது பழி போடுவது நியாயமற்ற செயல். தயாரிப்பாளர்கள் கூட்டாக சேர்ந்து வாரம் ஒன்று அல்லது ரெண்டு படங்களை கொடுத்தால் கண்டிப்பாக 80 சதவீத நஷ்டத்தை தவிர்த்து லாபம் பார்க்கலாம். நடிகர்களுக்கு 100 கோடி, 200 கோடி சம்பளம் கொடுப்பதை தவிர்த்து விட்டு, படத்தின் தரத்துக்கு பட்ஜெட்டை செலவு செய்தாலே மக்கள் தியேட்டருக்கு வருவார்கள்.


Click it and Unblock the Notifications











