'அந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறும்..!' - அதுல்யாவுக்கு பதில் சொன்ன இயக்குநர்!
'அந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறும்..!' - அதுல்யாவுக்கு பதில் சொன்ன இயக்குநர்!
சென்னை : 'ஏமாலி' படத்தின் இயக்குநர் வி.இசட் துரை நடிகை அதுல்யா ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டதற்கு பதில் கொடுத்துள்ளார்.
அதுல்யா, சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கும் 'ஏமாலி' திரைப்படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இந்தப் படத்தின் டீசரில் அதுல்யா சிகரெட் பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. அதற்கு ஹீரோயின் அதுல்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

ஏமாலி திரைப்படம்
இந்தப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். ‘லதா புரொடக்ஷன்ஸ்' என்ற புதிய பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை எம்.ரத்திஷ் கண்ணா, பிரகாஷ் இருவர் கவனிக்கின்றனர். சாம்டி.ராஜ் 'ஏமாலி' படத்திற்கு இசை அமைக்கிறார்.
ஏமாலி டீசர்
'ஏமாலி' படத்தின் முதல் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படத்தின் ஒளிப்பதிவை எம்.ரத்திஷ் கண்ணா, பிரகாஷ் இருவர் கவனிக்கின்றனர். சாம்டி.ராஜ் 'ஏமாலி' படத்திற்கு இசை அமைக்கிறார்.

ஆபாச சர்ச்சை
வெளியான டீசரில் நடிகை அதுல்யா ரவி, ஆபாசமான காட்சிகளில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர். ஆடை மாற்றுவது போலவும், படுத்திருக்கும் நிலையிலுமான காட்சிகளும் டீசரில் இடம்பெற்றிருந்தன. முதல் படத்தில் ஹோம்லியாக நடித்துவிட்டு இப்போது இப்படியான நடிப்பில் இறங்குவது தவறு என்கிற ரீதியில் பலரும் தங்களது விமர்சனங்களை வைத்திருந்தனர்.

மன்னிப்பு கேட்ட அதுல்யா
'ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்க்காத சில காட்சிகளிலும் நடித்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்தக் காட்சிகள் எப்படியோ டீசரில் தெரியாமல் வந்துவிட்டன. அவை படத்தில் இடம்பெறாது.' என ஃபேஸ்புக் பதிவின் மூலம் தனது ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் அதுல்யா.

இயக்குநர் வி.இசட் துரை
இதுகுறித்து வி.இசட்.துரை அதுல்யாவுக்கு விளக்கம் அளித்துள்ளார். 'அதுல்யா வருத்தப்படத் தேவையே இல்லை. காரணம் கதை அப்படி, இன்றைய இளைஞர்கள் காதலை டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்கிறார்கள். பிரேக்-அப், பிக்-அப், பார்ட்டி, அவுட்டிங், டேட்டிங் எல்லாம் சர்வசாதாரணமாக நடக்கிறது. அதைத்தான் படத்தில் காட்டியிருக்கிறேன்.

காட்சிகள் நீக்கப்படாது
கதைக்கு என்ன தேவையோ அந்தக் காட்சிகள் படத்தில் இருக்கும். படத்தைத் தணிக்கைக்கு கொண்டு போகும்போது தணிக்கைக் குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தால் அந்தக் காட்சிகளை நீக்குவேன். ஆனால் கதைக்கு மிக மிக அவசியமாக இருப்பதால் நீக்க மாட்டார்கள் என்ற நம்புகிறேன். அதனால் அதுல்யா வருத்தப்படவும் தேவையில்லை, மன்னிப்பு கேட்கவும் தேவையில்லை' எனக் கூறியிருக்கிறார் வி.இசட் துரை.


Click it and Unblock the Notifications











