Yogi Babu - மாறும் பாதை.. நீங்கள் கதாநாயகனா? காமெடியனா?.. யோகி பாபு சொன்ன தரமான பதில்
சென்னை: Yogi Babu (யோகி பாபு) லக்கி மேன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய யோகி பாபுவிடம் நீங்கள் கதாநாயகனா இல்லை காமெடியனா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் யோகி பாபு. அவரது கவுண்ட்டர்களும், டைமிங் சென்ஸும் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைப்பவை.லொள்ளு சபாவின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு பெரிய திரைக்கு வந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த யோகிபாபு இப்போது இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். முன்னணி ஹீரோக்கள் பெரும்பாலானோருடன் சேர்ந்து நடித்துவிட்டார்.

ஹீரோ யோகி பாபு: காமெடி நடிகராக மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கிவருபவர் யோகி பாபு. நெல்சன் திலீப்குமார் முதன்முதலில் இயக்கிய கோலமாவு கோகிலா படத்த்தின் மூலம்தான் லீட் ரோலில் நடித்தார் யோகி. அது நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து கூர்கா உள்ளிட்ட படங்களில் லீட் ரோலில் நடித்தாலும் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டேலா: அப்படிப்பட்ட சூழலில் மண்டேலா படத்தில் நடித்தார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. எனவே இனி யோகி பாபு தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பார் என கருதப்பட்டது. ஆனால் வந்த வழியை மறக்காத அவர் காமெடி வேடங்களிலும் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த மாவீரன் படம் மெகா ஹிட்டானது.
ஜெயிலரில் யோகிபாபு: அதேபோல் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காமெடி ரோலை ஏற்றிருந்தார். மேலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஜவான் படத்திலும் காமெடி ரோலை ஏற்றிருக்கிறார். இப்படி நிற்பதற்குக்கூட நேரம் இல்லாமல் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துவருகிறார் யோகிபாபு.
லக்கிமேன்: இந்தச் சூழலில் லக்கி மேன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் யோகிபாபு. படம் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய யோகி பாபு, "நான் ஒரு அன்லக்கி என்று நினைத்துதான் சுற்றிக்கொண்டிருந்தேன். 23 வருடங்களாக இந்த ஃபீல்டில் இருக்கிறேன். சமீபத்தில் எனக்கு கிடைத்த நல்ல இயக்குநர்களால்தான் லக்கிமேன் ஆனேன். இந்தப் படம் எனக்காகவே உருவானது போல் இருக்கிறது.
கதை கேட்கமாட்டேன்: பாலாஜி வேணுகோபால் என்னிடம் கதை சொல்ல வரும்போது அவருடைய எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தது. என்னிடம் வரும் இயக்குநர்களிடம் கதை கேட்டு நடிக்க மாட்டேன். அவர்கள் படும் கஷ்டத்தை கேட்டுதான் படம் செய்வேன். என்னுடைய கடைசி காலம்வரை காமெடியனாகத்தான் நடிப்பேன். ஏனென்றால் எனக்கு சோறு போட்டது காமெடிதான்." என்றார்.


Click it and Unblock the Notifications











