வராகி அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு; வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை: நடிகர் யோகி பாபு மிகப்பெரிய பக்தி மான் என்பது அவரது ட்விட்டர் பக்கத்தில் உள்ள முருக கடவுள் புகைப்படமே எடுத்துரைக்கும்.
இந்நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் நடிகர் யோகி பாபு வராகி அம்மனுக்கு கோயில் ஒன்றை கட்டி அதன் கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்.
சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு தனக்கு அனைத்து யோகங்களையும் வாரி வழங்கி வரும் வராகி அம்மனுக்கு கோயில் கட்டி உள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இறங்கி ஆடும் யோகி பாபு
காமெடி உலகில் திடீரென உருவாகிய மிகப்பெரிய வெற்றிடத்தை தனக்கு சாதகமாக மாற்றி அதனை நிரப்பி அசத்தி வருகிறார் யோகி பாபு. முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி செய்து கலக்குவது மட்டுமின்றி தானும் ஹீரோவாக நடித்தும் வெற்றிகளை குவித்து வருகிறார்.

நல்ல நடிகர்
நகைச்சுவையை தாண்டி யோகி பாபுவுக்குள் இருக்கும் நல்ல நடிகரை பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநர் மாரி செல்வராஜ் காண்பிக்க தொடர்ந்து கர்ணன் படத்திலும், தான் ஹீரோவாக நடித்த மண்டேலா படத்திலும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளார் யோகி பாபு.

பிசி கால்ஷீட்
வடிவேலு, சந்தானம் தமிழ் சினிமாவில் எப்படி பிசி கால்ஷீட் காமெடியன்களாக இருந்தார்களோ அதே அளவுக்கு நடிகர் யோகி பாபுவின் கால்ஷீட்டுக்காக பல முன்னணி இயக்குநர்களும் நடிகர்களும் காத்திருக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. யோகி பாபுவும் கமீட் ஆகும் படங்களை கச்சிதமாக முடித்துக் கொடுத்து வருவதால் அவர் பலருக்கும் செல்லப் பிள்ளையாகவே மாறி உள்ளார்.

கடவுள் பக்தி
சினிமாவில் யோகக் கார யோகி பாபுவாக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபுவுக்கு கடவுள் பக்தி அதிகம். தனது ட்விட்டர் பக்கத்திலேயே முருக கடவுளின் புகைப்படத்தை தான் வைத்திருப்பார். தனது திருமணத்தையும் குலதெய்வ கோயிலில் மிகவும் எளிமையான முறையில் நடத்தி முடித்தார்.

குழந்தை பெயர்
முருக கடவுளின் தீவிர பக்தரான யோகி பாபுவுக்கு இந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முருக கடவுளின் பெயரான விசாகன் எனும் பெயரை வைத்துள்ளார். இந்நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் அவர் கட்டியுள்ள கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றுள்ளது.

கோயில் கட்டிய யோகி பாபு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் நகரம்பேடு கிராமத்தில் உள்ள தனது சொந்த இடத்தில் வராகி அம்மனுக்கு நடிகர் யோகி பாபு கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தியிருக்கிறார். யோகி பாபு கட்டிய கோயிலின் கும்பாபிஷேக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அர்ஜுன் கோயில்
சமீபத்தில் நடிகர் அர்ஜுன் போரூரில் பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயிலை கட்டி இருந்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அந்த கோயிலின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், திரைத் துறையை சேர்ந்த அடுத்த பிரபலமும் கோயில் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வீரப்பன் கஜானா
காமெடி நடிகராகவும் காமெடி திரைப்படங்களில் கதாநாயகனாகவும் கலக்கி வரும் யோகி பாபு சமீபத்தில் நவரசா ஆந்தாலஜியில் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய குறும்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக வீரப்பன் கஜானா எனும் மிரட்டலான டைட்டிலில் உருவாகும் படத்தில் யூடியூபர் வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் குடும்பம் வைத்த கோரிக்கையை ஏற்று அந்த படத்தின் பெயரை மாற்றவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











