கொரோனா இருக்கட்டும்.. நாம ரிஷப்ஷன முடிச்சுடுவோம்.. முதல்வர், துணை முதல்வருக்கு யோகி பாபு அழைப்பு!
சென்னை: முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருமண வரவேற்பு அழைப்பிதழை நடிகர் யோகி பாபு நேரில் சென்று கொடுத்துள்ளார்.
அமீர் நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பாபு, அந்த படத்திற்கு பிறகு யோகி பாபு என்ற அடைமொழியுடன் அறியப்பட்டு வருகிறார்.
கொரோனா வைரஸ் ஒரு பக்கம் இருக்கட்டும், நாம நம்ம திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திடலாம் என காமெடி நடிகர் யோகி பாபு திட்டமிட்டுள்ளார்.

திருமணம்
கடந்த பிப்ரவரி 5ம் தேதி, குலதெய்வ கோயிலில், மஞ்சு பார்கவி என்ற பெண்னை காமெடி நடிகர் யோகி பாபு மணம் முடித்தார். திருமணம் குறித்து வெளியான தகவல்களை மறுத்து வந்த நடிகர் யோகி பாபு, திடீரென யாருக்கும் அறிவிக்காமல், குடும்பத்தினர் முன்னிலையில், தனது திருமணத்தை சிம்பிளாக நடத்தி முடித்தார்.

விஜயகாந்துக்கு அழைப்பு
திருமண வரவேற்பை மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ள யோகி பாபு, வரும் ஏப்ரல் 5ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அண்மையில் திருமண வரவேற்பு அழைப்பிதழை யோகி பாபு நேரில் சென்று கொடுத்தார்.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும், தனிமைப் படுத்துதலை கடைபிடிக்க வேண்டியும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தனது திருமண வரவேற்பு அழைப்பிதழை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சென்று கொடுத்துள்ளார் யோகி பாபு.

முதல்வருக்கும்
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சென்று அழைத்த யோகி பாபு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சென்று, பூங்கொத்து கொடுத்து, தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார். மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.

30 பேர்
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருமணங்களை நடத்த நினைப்பவர்கள், அதிகபட்சமாக 30 பேர் வரை கலந்து கொண்டு திருமணங்களை நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு எத்தனை பேரை அழைத்து வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என்றும், ஏப்ரல் 5ம் தேதிக்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











