ரஜினிகாந்த் என்னை துப்பியதாக தோன்றும்.. யோகிபாபு என்ன இப்படி ஓபனா சொல்லிட்டாரு?
சென்னை: நடிகர் யோகி பாபு தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். லொள்ளு சபாவில் தலை காட்டி பிறகு சினிமாவுக்குள் வந்து காமெடி நடிகராக வலம் வந்த அவர் இப்போது ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹீரோவாக மாறினாலும் காமெடி ரோல்களையும் விடாமல் செய்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. அதே சமயம் அந்தப் படத்தில் யோகிபாபுவை அளவுக்கு அதிகமாகவே உருவகேலி செய்துவிட்டார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது
தொடர் வாய்ப்புகள்: அந்தப் படத்திற்குப் பிறகு யோகிபாபுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் தனது டைமிங் காமெடிகளாலும் கவுண்ட்டர்களாலும் ரசிகர்களை வெகுவாகவே சிரிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறந்து போக, சந்தானம் ஹீரோவாக மாற என காமெடிக்கென வெற்றிடம் உருவானது. அதனை யோகிபாபு நிரப்பினார்.

ஹீரோவான யோகி : காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் பாபு: ஒருபக்கம் ஹீரோவாக இருந்தாலும் காமெடியனாகவும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். பொதுவாக ஹீரோ ஆசை வந்துவிட்டால் காமெடியை மறந்துவிடுவார்கள்; அப்படி இல்லையென்றால் அவர்கள் செய்யும் காமெடி சிரிப்பு வரவைக்காது என்ற கருத்து உண்டு. ஆனால் யோகிபாபுவோ மாவீரன், ஜெயிலர், ரத்னம், அரண்மனை 4, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் ரசிகர்களை தனது காமெடியால் சிரிக்கவே வைத்தார் என்பது கவனிக்கத்தக்கது. தமிழ் மட்டுமின்ரி ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கிறார்.
இப்போதைய படங்கள்: யோகிபாபு இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே முதல் பாகம் ஹிட்டானதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரஜினி குறித்து பேசியிருக்கிறார். அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "தர்பாரிலிருந்து ரஜினிகாந்த்துடன் பணியாற்றிவருகிறேன்.
நாலு முறை பார்த்த ரஜினி: இப்போதும் நானும் நெல்சனும் இருக்கும்போது ரஜினிகாந்த் வந்து நெல்சனிடம், 'கோலமாவு கோகிலா படத்தை நான்கு முறை பார்த்தேன்' என்று சொல்வார். என்ன இவரு பார்த்துட்டே இருக்காரு என்று நெல்சனிடம் சொல்வேன். ஏனெனில் ரஜினிக்கு அந்தப் படம் ரொம்ப பிடிக்கும். அதேபோல் மண்டேலா பார்த்தேன் என்று சொல்வார். அதேசமயம் நான் நடித்த இன்னும் சில படங்களை பார்த்துவிட்டு கொஞ்சம் அப்படி இருந்தது என்பார். உடனே எனக்கு அய்யயோ காறி துப்பிட்டாரே என தோன்றும்" என்றார்.


Click it and Unblock the Notifications











