அங்கேயும் நடிக்கப் போகிறாரா..? கன்னட ஹீரோக்கள் சிவராஜ்குமார், துனியா விஜயை சந்தித்த யோகிபாபு!
சென்னை: பிரபல காமெடி நடிகர் யோகிபாபு, கன்னட ஹீரோக்களை திடீரென்று சந்தித்துள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.
Recommended Video
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் நாயகனாக நடித்த 'யோகி' படம் மூலம் நடிகராக அறிமுகமானார் பாபு.
அந்தப் படத்தின் டைட்டிலிலேயே 'யோகி' பாபு என்று அழைக்கப்படுகிறார். தமிழில் பிசியான காமெடி நடிகராக இருக்கிறார்.

காத்திருந்தார் ரஜினி
பையா, கலகலப்பு, அட்டகத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், வீரம், மான் கராத்தே, அரண்மனை, யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள யோகிபாபுவின் நடிப்பு காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை படங்களில் பேசப்பட்டது. பிறகு விஜய்யின் பிகில், ரஜினியின் தர்பார் படங்களிலும் நடித்திருந்தார். இவரது கால்ஷீட்டுக்கு ரஜினியே காத்திருந்தார் என்றும் கூறப்பட்டது.

சர்ச்சையானது
சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. ஏற்கனவே தர்மபிரபு படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ‘தெளலத்' படம் பற்றி கருத்து கூறிய அவர், எனக்கும் தெளலத் படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறியிருந்தார். இது சர்ச்சையானது. இதுபற்றி அந்த படத்தில் தயாரிப்பாளர், முகமது அலி, யோகிபாபு மீது புகார் கூறியிருந்தார்.

இழப்பு ஏற்பட்டது
அவர் கூறும்போது, இதில் யோகிபாபு நடித்துள்ளார். அவர் நடித்த காட்சிக்காக டப்பிங் பேச வராமல் இழுத்தடித்தார். அவருக்காக 9 மாதங்கள் காத்திருந்தேன். பின்தான் டப்பிங் பேசி கொடுத்தார். அவர் முன்பே டப்பிங் பேசி முடித்திருந்தால் எப்போதோ படம் வெளியாகி இருக்கும். அவர் சரியான நேரத்தில் டப்பிங் பேசாததால் படம் வெளியாக தாமதமாகி மன உளைச்சலும் பண இழப்பும் ஏற்பட்டது என்று கூறியிருந்தார். இது பரபரப்பானது.

சிவராஜ்குமார்
இந்நிலையில், அவர் கன்னட ஹீரோக்களை சந்தித்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரை சந்தித்த புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவின. அவர் இப்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், துனியா விஜய் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

முன்னணி ஹீரோக்கள்
சிவராஜ்குமார் இப்போது பஜ்ரங்கி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்குச் சென்ற யோகிபாபு, அவரை சந்தித்து பேசியுள்ளார். இந்தப் புகைப்படத்தை சிவராஜ்குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகர் யோகிபாபு, தமிழில், ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.

சென்னை எக்ஸ்பிரஸ்
ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் இந்திக்கும் சென்றார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்போது கன்னட படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்காகத்தான் இந்த சந்திப்பும் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிரது. ஆனால், இதுபற்றி யோகிபாபு உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications











