Yogi Babu: யாரும் ஏமாந்து விடாதீங்க.. மோசடிகளைத் தவிர்க்க..ஓபனாகவே தொலைபேசி எண்களை கொடுத்த யோகிபாபு!
சென்னை: சமீப காலமாகவே திரைப்பிரபலங்கள் என்று சொல்லிக் கொண்டு பலரையும் சில மோசடிக்காரர்கள் ஏமாற்றி வருகிறார்கள். இதனால் பலரும் பணம், பொருள், நேரம் என பலவற்றை இழந்து ஏமாந்து விடுகிறார்கள். கொஞ்சம் உஷாரான நபர்கள் மட்டும் அந்த மோசடி வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்கிறார்கள். இப்படி இருக்கும்போது, நடிகர் யோகி பாபு பெயரைச் சொல்லிக் கொண்டு யாரும் யாரையும் ஏமாற்றக் கூடாது என்று ஒரு முடிவெடுத்து, தன்னைத் தொடர்பு கொள்வதற்காக அதிகாரப்பூர்வ நபர்களின் எண்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் நடிகர் தனுஷின் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் தனக்கு மெசேஜ் செய்ததாகவும், அப்படி மெசேஜ் செய்த நபர் கமிட்மெண்ட் இருக்கும் என்று அட்ஜெஸ்மெண்ட்டுக்கு அழைத்ததாகவும் தெரிவித்தார் சின்னத்திரை நடிகை மான்யா அனந்த். அவரது இந்த பேட்டி பெரும் சர்ச்சையாக மாறியது. மேலும் தனுஷின் உதவியாளர் என்றுதான் ஒருவர் தனக்கு மெசேஜ் செய்தார் என்று கூறினார். இப்படி இருக்கும்போது, தன்னைத் தொடர்புகொண்டது தனுஷின் உதவியாளர் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட மான்யா உஷாராகி, எனக்கு பட வாய்ப்பே வேண்டாம் என்று கூறி விட்டதாக தெரிவித்தார்.

மான்யா ஆனந்த்தின் இந்த பேட்டிக்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன்னரே தனது பெயரைப் பயன்படுத்தி யாரோ மோசடி செய்து கொண்டு இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட தனுஷின் உதவியாளர், நான் யாருக்கும் படவாய்ப்புகள் குறித்து மெசேஜ் செய்யவில்லை. எனவே திரைத்துறையினர் கொஞ்சம் உஷாராக இருங்கள் என்று தெரிவித்திருந்தார். இது மட்டும் இல்லாமல், காவல்துறையில் புகாரும் அளித்திருந்தார். தற்போது அந்த ஏமாற்றுப் பேர்வழியை காவல்துறை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல், நடிகை ஸ்ரேயாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு யாரோ ஒரு மோசடி நபர் திரைத்துறையில் பலருக்கும் மெசேஜ் செய்து வந்துள்ளார். இது குறித்து தெரிந்து கொண்ட நடிகை ஸ்ரேயா தனது எண் என்று சொல்லிக் கொண்டு மெசேஜ்கள் அனுப்பப்பட்ட எண்ணை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து , இது எனது எண்ணே இல்லை. யாரும் இந்த எண்ணில் இருந்து தொடர்பு கொண்டால், அது நான் என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு தன்னை தொடர்பு கொள்ள, தனது மேனேஜர் மற்றும் பி.ஆர்.ஓ ஆகியோரின் எண்களைக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " அன்புடையீர், நடிகர் யோகி பாபு திரைப்படம் தொடர்பான அனைத்து விசாரணைகள், மீடியா தொடர்புகள், பத்திரிகைச் சந்திப்புகள் மற்றும் PR உடனான அதிகாரப்பூர்வ தொடர்புகளுக்கான முதன்மை தொடர்புப்புள்ளிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன:
பெயர்: சூப்பர் குட் கணேஷ்
பதவி: மேனேஜர்
தொடர்பு: +91 94440 00101
பெயர்: ரேகா
பதவி: PRO
தொடர்பு: +91 97911 00070
மேலே உள்ள அதிகாரப்பூர்வ எண்கள் மூலம் மட்டுமே எதிர்கால தொடர்புகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஒத்துழைப்பிற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. அன்புடன், யோகி பாபு" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு திரைத்துறையில் வாய்ப்பு தேடிவரும் வளரும் நட்சத்திரங்களுக்கு உதவியாக இருக்கும் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











