ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 எப்படி இருக்கும்?.. யோகிபாபு என்ன சொல்றாரு கேளுங்க?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டானதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் அறிவிப்பு வீடியோவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கும் நடிகர் யோகிபாபு படம் குறித்து ஒரு விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ஓரளவுக்குதான் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினி. தற்போதைக்கு தமிழ் சினிமாவில் லோகேஷ் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்துவிட்டார். எனவே ரஜினியை வைத்து அதேபோன்றொரு மெகா ஹிட்டை கொடுப்பார் என்று ரஜினியின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
நட்சத்திர பட்டாளம்: கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் தேவா என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறது. மேலும் அவருடன் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக அமீர் கான் தமிழ் சினிமாவில் நடித்திருப்பதால் அவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரத்தை லோகேஷ் கொடுத்திருப்பார்; ரஜினிக்கும் அவருக்கும் இடையே எந்த மாதிரியான மாஸ் காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

சறுக்கல் டூ எழுச்சி: இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்திருந்த அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. எனவே ரஜினியின் சேப்டர் க்ளோஸ் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் ரஜினியை விமர்சித்தவர்களின் வாயை ஒட்டுமொத்தமாக அடைத்துவிட்டது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்து; சூப்பர் ஸ்டார் நாற்காலில் அவருக்கு மட்டுமே நிரந்தரமானது என்பதை உணர்த்தியது.
ஜெயிலர் 2: ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடிதான் படத்தையும் இயக்குநர் முடித்திருந்தார். இருப்பினும் இரண்டாவது பாகம் குறித்து யாரும் வாய் திறக்காமல் இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ஜெயிலர் 2வின் அறிவிப்பு வீடியோ வெளியானது. அதில் ரஜினிகாந்த் படு மாஸாக காட்சியளித்தார். ப்ரோமோவை நெல்சன் தனது ஸ்டைலில் அட்டகாசமாக உருவாக்கியிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள்.
யோகிபாபு பேட்டி: இந்தப் படத்தில் ரஜினியுடன் யோகிபாபுவும் நடிக்கிறார். மேலும் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தொடர்பாக விரைவில் அப்டேட்டுகள் வரவிருக்கின்றன. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த யோகிபாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், "திருச்செந்தூர் முருகன் எனக்கு தொடர்ந்து வெற்றியை கொடுக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி சாருடன் நடித்த அனுபவம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது ஜெயிலர் இரண்டாவது பாகத்திலும் நடித்துவருகிறேன். முதல் பார்ட்டைவிடவும் இரண்டாவது பார்ட் அருமையாக வந்திருக்கிறது. ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படிதான் இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











