யோகி பாபுவின் லோக்கல் சரக்கு.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. செம அப்டேட் வெளியானது
சென்னை: நடிகர் யோகி பாபு தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். லொள்ளு சபாவில் தலை காட்டி பிறகு சினிமாவுக்குள் வந்து காமெடி நடிகராக வலம் வந்த அவர் இப்போது ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹீரோவாக மாறினாலும் காமெடி ரோல்களையும் விடாமல் செய்துவருகிறார். அந்தவகையில் அவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் லோக்கல் சரக்கு. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. அதே சமயம் அந்தப் படத்தில் யோகிபாபுவை அளவுக்கு அதிகமாகவே உருவகேலி செய்துவிட்டார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது.

ஹீரோ: தொடர்ந்து வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னணி காமெடி ஆக்டராக மாறினார். இந்த சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் யோகி பாபு லீட் ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து காமெடி ஆக்டர்: ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றாலும் காமெடி ரோல்களையும் அவர் விடுவதாக இல்லை. அந்த வகையில் மாவீரன், ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். குய்கோ படத்தில் ஹீரோவாகவும் கடைசியாக கலக்கியிருந்தார். இப்படி கலந்துகட்டி நடிக்கும் யோகி பாபு இப்போது லோக்கல் சரக்கு என்ற படத்திலும் காமெடி ஆக்டராக நடித்திருக்கிறார்.
லோக்கல் சரக்கு: வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமாரின் பிரமாண்ட தயாரிப்பில் பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் 'லோக்கல் சரக்கு'. இதில் முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடிக்க, நாயகியாக உபாசனா ஆர்.சி நடித்திருக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், நடுத்தர குடும்பத்தலைவர் பொறுப்பில்லாதவராக இருந்தால், அந்த குடும்பம் எந்த வழியில் செல்லும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள். மேலும், இப்படத்தின் க்ளைமேக்ஸ் பெண்கள் மன தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதை மிக அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.
எப்போது ரிலீஸ்: இந்த சூழலில் படமானது ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபு கூட்டணியின் காமெடி காட்சிகளும், பாடல் காட்சிகள் கதையோடு பயணிக்கும் வகையில் இருப்பது ட்ரெய்லரை பார்க்கையில் உறுதி செய்ய முடிகிறது. அழகர் மலை, சுறா, பட்டைய கிளப்புவோம் பாண்டியா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்க,பழநி என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் முழு பாடல்களையும் விவேகா எழுதியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











