Yogi Babu: சம்பளத்தை குறைக்கச் சொன்ன தனஞ்ஜெயன்.. ரியாக்ஷன் கொடுத்த யோகி பாபு.. மேடையில் நடந்த சம்பவம்
சென்னை: நடிகர் யோகி பாபு மீது அவ்வப்போது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றால் அது, யோகி பாபு அதிகப்படியான சம்பளம் கேட்கிறார், கால் ஷீட் கொடுத்துவிட்டு படத்திற்கு நடிக்க வர மாட்டேன் என்கிறார், அவர் நடித்த படத்திற்கே புரோமோஷனுக்கு வர பணம் கேட்கிறார். பல படங்களின் புரோமோஷனில் கலந்து கொள்வதில்லை என்பதுதான். அவர் கதாநாயகனாக நடிக்கும் ஜோரா கையைத் தட்டுங்க படம் வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி பாபு பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
முதலில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், யோகி பாபு குறித்து அவதூறு கருத்துக்களை சிலர் அவர்களின் படங்களின் புரோமோஷனுக்காக பரப்புகிறார்கள். ஒரு நடிகர் அந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில், ஒரு நாளோ இரண்டு நாளோ நடித்துள்ளார் என்றால் அந்த படத்தின் புரோமோஷனுக்கு அவரை அழைப்பது, அவர் வரவில்லை என்று குற்றம் சுமத்துவது என்பது முற்றிலும் தவறான விஷயம். ஒரு படத்தில் யோகி பாபு 15 நாட்கள், 20 நாட்கள் நடித்துள்ளார் என்றால் அந்த படத்தின் புரோமோஷனுக்கு அவரை அழைப்பது சரியானது, யோகி பாபுவும் அந்த படத்தின் புரோமோஷனுக்காக வருவார்.

தனஞ்ஜெயன்: ஜோரா கைய தட்டுங்க படத்தின் கதாநாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். அதனால் இந்த படத்தின் புரோமோஷனுக்கு அவர் வந்துள்ளார். மேலும் யோகி பாபு காமெடியனாக நடிக்கும் படங்களில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு, கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக எஸ்.ஜே. சூர்யா கூறியதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். வில்லனாக நடிக்க கூப்பிட்டால் நான் சொல்வதுதான் சம்பளம், கதாநாயகனாக நடிக்க கூப்பிட்டால் நீங்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன் என எஸ்.ஜே. சூர்யா சொன்னார். அதேபோல் நீங்களும் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.
யோகி பாபு சம்பள பாக்கி: இவரைத் தொடர்ந்து பேசிய யோகி பாபு, " தனஞ்ஜெயன் சார், நான் சம்பளத்தை எப்போது முடிவு செய்வது கிடையாது. எனது சம்பளத்தை முடிவு செய்பவர்கள் அவர்கள் ( படக்குழுவினர்), அந்த சம்பளத்தைக் கேட்டாலே என்னை வில்லனாக பார்க்கிறார்கள். நான் சம்பளத்தையே முடிவு செய்யவில்லை. நீங்களே கதை கேளுங்கள், நீங்களே சம்பளத்தை முடிவு செய்யுங்கள், நீங்கள் பேசிய சம்பளத்தை முழுவதுமாக பெற்றுக் கொடுத்து விடுங்கள். நான் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களின் புரோமோஷனுக்கு நான் எப்படி வர முடியும்? நான் அனைவருக்கும் ஒத்துழைக்கும் மனப்பான்மையில் தான் இருக்கிறேன். ஆனால் உண்மை தெரியாமல் எதுவும் பேச வேண்டாம். எனக்கு சம்பள பாக்கி எவ்வளவு இருக்கிறது தெரியுமா? அந்த பட்டியலை நான் வெளியிட்டால் எனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுக் கொடுத்து விடுவீர்களா? அதனால் உண்மை என்று தெரியாமல் பேச வேண்டாம். மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்று பேசினார்.

மனச்சோர்வு: அதேபோல் யோகி பாபு குறித்து, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசும்போது, தம்பி யோகி பாபு தமிழ் சினிமாவுக்கு தேவை. அவர் எப்போதும் மனச்சோர்வு அடையக் கூடாது. நான் எப்போது போன் செய்தாலும் உடனே என்ன செய்யவேண்டும் என்று கேட்டு அதைச் செய்து கொடுப்பார். பணமே வேண்டாம் என்றும் கூறுவார். எனவே எந்தக் காலத்திலும் தம்பி யோகி பாபு சோர்வடைந்துவிடக்கூடாது" என்று பேசினார்.


Click it and Unblock the Notifications











