கருத்து கேட்டே கருத்துவிட்டேன்.. படத்தை படமா எடுங்க.. வாத்தி படத்தை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை : தனுஷ் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான வாத்தி படத்தை ப்ளூ சட்டை மாறன் வச்சு செய்துள்ளார்.
இப்படத்தில், சம்யுக்த்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள, படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வாத்தி
வாத்தி படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ள விமர்சனம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், அரசு புதுசா ஒரு சட்டத்தை கொண்டு வருகிறது, அந்த சட்டத்தால், தனியார் பள்ளிக்கு பாதிப்பு என்று தெரிந்து கொண்ட சமுத்திரக்கனி பெருசா ஒரு பிளான் போட்டு, நலிந்து போன பள்ளிகளுக்கு, தனியார் பள்ளியில் இருந்து ஆசிரியர்களை அனுப்பி ஒரு உள்குத்து வேலையை செய்கிறார். சமுத்திரக்கனியின் உள்நோக்கம் தெரியாத தனுஷ், ஒன்னுக்கும் ஆகாத மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து பாஸாக்கி விடுகிறார். இதனால், கடுப்பான சமுத்திரக்கனி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஆந்திரா மசாலா
படம் ஆரம்பிக்கும் போது என்னமோ தமிழ்நாட்டில் கதை நடப்பது போலத்தான் இருந்தது. ஆனால், கதை போகப் போக ஆந்திரா மசாலாவை நன்றாக தடவி விட்டுள்ளார் இயக்குநர். படத்தின் முதல் பாகத்தை ஒரளவுக்கு நன்றாக பண்ணியிருக்கிறார்கள், இடைவேளைக்கு பிறகு படம் கொல மசாலாத்தனமாக இருந்தது.

ரசிக்கும்படி இல்லை
படத்தில் வரக்கூடிய ஹீரோ வில்லன் இருவருமே மூளை சம்மந்தமான தொழில் செய்யக்கூடியவர்கள், இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே மைண்ட் கேம் தான் இருந்து இருக்க வேண்டுமே தவிர, இவர்கள் இருவரும் சாராய வியாபாரிக்குள் வரும் சண்டை மாதிரி, வில்லன் ஆள்வைத்து அடிப்பதும், ஹீரோ அவர்களை அடித்து துரத்துவதை பார்க்கும் போது படம் ரசிக்கும்படி இல்லை.

லாஜிக் இல்லை
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தக்கதை புதுசு இல்லை. ராட்சசி,சாட்டை, அடுத்த சாட்டை போன்ற பல படங்கள் வந்துவிட்டன. கதை என்னத்தான் பழசா இருந்தாலும், ட்ரீட்மெண்டாவது புதுசா இருக்கும்னு பார்த்த அதுவும் இல்லை. லாஜிக் சுத்தமா இல்லை, என்னத்தான் இது ஒரு பீரியட் படமாக இருந்தாலும், தமிழ்நாட்டு எஜிகேஷனுக்கு இந்த படம் பொருந்தவே இல்லை.

படத்தை படமா எடுங்க
மொத்தத்தில் இந்த படத்தில் நல்ல கருத்து சொல்லி இருக்காங்க, ஆனால் கருத்து எல்லாம் யாருங்குங்க வேணும், இவங்க கருத்தை கேட்டு கேட்டே எப்படி கருத்துவிட்டேன் பாருங்க, கருத்து எல்லாம் எதுக்கு, ஏதாவது கருத்து சொல்லவேண்டும் என்றால் மேடையில் பேசுங்க. படத்தை படமா எடுங்க என ப்ளு சட்டை மாறன் வாத்தி படத்தை வச்சு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











