செஞ்சுரியே அடிச்சாலும் நீங்க சின்னக்குயில் சித்ரா தான்.. சித்ரா அம்மாவின் 63வது பிறந்த நாள் இன்று

சென்னை: இந்திய திரையிசை உலகில் காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல் என்றால் அது பாடகி கே.எஸ். சித்ரா அம்மாவின் குரல்தான். ஆயிரக்கணக்கான பாடல்கள், எண்ணற்ற விருதுகள், பல தலைமுறைகளின் மனதில் அழியாத இடம் என இசைப் பயணத்தில் பல சாதனைகளை படைத்துள்ள சின்னக்குயில் சித்ரா இன்று தனது 63வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி இந்திய இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் சித்ரா அம்மா. காதல், சோகம், பக்தி, நாட்டுப்புறம், மெலடி என எந்த வகை பாடலாக இருந்தாலும், தனது இனிமையான குரலால் உயிர் கொடுத்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார்.

சித்ரா அம்மாவின் இசைப் பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது 'சிந்து பைரவி' திரைப்படம். அந்தப் படத்தில் இடம்பெற்ற "பாடறியேன் படிப்பறியேன்" மற்றும் "நான் ஒரு சிந்து" பாடல்களுக்காகவே அவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார். அந்த விருது சித்ரா அம்மாவுக்கு கிடைத்தது மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே ஒரு பெருமையான தருணமாகவும் அமைந்தது.

You ll Always Be Our Chinnakuyil Celebrating KS Chithra s 63rd Birthday and Her Timeless Musical Legacy

'சிந்து பைரவி' படத்தில் சுகாசினி நடித்த 'சிந்து' கதாபாத்திரம், முறைப்படி கர்நாடக இசை கற்றுக்கொள்ளாத ஒரு கிராமத்து பெண். ஆனால் இயல்பாகவே இசை அறிவும் திறமையும் கொண்டவராக அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த உணர்வை குரலில் கொண்டு வர வேண்டும் என்ற மிகப் பெரிய சவாலை இசையமைப்பாளர் இளையராஜா சித்ராவிடம் வைத்திருந்தார். முறைப்படி கர்நாடக இசை பயின்றிருந்தாலும், ஒரு எளிய கிராமத்து பெண்ணின் இயல்பையும், சாஸ்திரீய இசையின் கம்பீரத்தையும் ஒரே பாடலில் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் சித்ரா அம்மா.

கேட்பதற்கு எளிமையான நாட்டுப்புறப் பாடல் போலத் தோன்றும் "பாடறியேன் படிப்பறியேன்" பாடலுக்குள் சிந்துபைரவி, புன்னாகவராளி உள்ளிட்ட பல ராகங்களை நுட்பமாக கலந்திருந்தார் இளையராஜா. அந்தக் கடினமான ஸ்வரங்களையும் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் மிக இயல்பாகப் பாடிய சித்ரா அம்மாவின் திறமை, இசை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

You ll Always Be Our Chinnakuyil Celebrating KS Chithra s 63rd Birthday and Her Timeless Musical Legacy

தேசிய விருது: இந்த தேசிய விருது சித்ரா அம்மாவின் ஆரம்பகால இசைப் பயணத்திலேயே கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் இளம் வயதிலேயே தமிழ் திரையிசைக்காக தேசிய விருதை வென்ற பாடகியாக அவர் சாதனை படைத்தார். அதன்பிறகே ரசிகர்கள் அவரை அன்போடு "சின்னக்குயில் சித்ரா" என்று அழைக்கத் தொடங்கினர். அந்த பெயர் இன்று வரை அவரது அடையாளமாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் அந்த பாடலின் ரெக்கார்டிங்கின் போது சித்ரா அம்மாவுக்கு தேர்வு இருந்ததாகவும், இசைஞானியோ அந்த தேர்வு எழுதினால் ஒரு பாடத்தில் பாஸ் ஆவாய், இந்த ரெகார்டிங்கிற்கு வந்தால் வாழ்க்கையிலேயே பாஸ் ஆவாய் என்று கூறிவிட்டு, முடிவை நீயே எடுத்துக் கொள் என்று கூறினாராம். இசைஞானி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது என்று சொல்வது போல வந்து பாடி தனது முதல் தேசிய விருதை தட்டித் தூக்கினார் சித்ரா அம்மா.

63வது பிறந்த நாள்: தேசிய விருதுகள், மாநில அரசுகளின் விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட ஏராளமான உயரிய விருதுகளை வென்றிருந்தாலும், ரசிகர்களுக்கு அவர் என்றும் சின்னக்குயில்தான். அதனால்தான் அவரது 63வது பிறந்த நாளை முன்னிட்டு, "செஞ்சுரியே அடிச்சாலும் நீங்க எங்களோட சின்னக்குயில் சித்ராதான்", "ஒரு தலைமுறையின் உணர்வுகளுக்கு குரல் கொடுத்த பாடகி", "உங்கள் குரலுக்கு வயசே ஆகாது" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரே பெயர்: காலம் மாறலாம், இசையின் வடிவம் மாறலாம். ஆனால் சித்ராவின் குரல் ஏற்படுத்திய தாக்கமும், அந்த குரலோடு வளர்ந்த தலைமுறைகளின் நினைவுகளும் என்றும் மாறப்போவதில்லை. அதனால்தான், நூறு சாதனைகள் படைத்தாலும் ரசிகர்களின் மனதில் அவர் என்றும் ஒரே பெயர்... "சின்னக்குயில் சித்ரா!"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X