Alphonse Puthren New Movie - கொளுத்தும் வெயிலில் ஆடிஷனுக்கு வரிசைக்கட்டிய இளைஞர்கள்
சென்னை:Alphonse Puthren New Movie (அல்போன்ஸ் புத்திரனின் புதிய படம்) இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்துகொள்ள கொளுத்தும் வெயிலில் இளைஞர்கள் வரிசைக்கட்டி நின்றனர்.
சினிமா எனும் கனவு தொழிற்சாலைக்குள் நுழைந்து பெயரும், புகழும் சம்பாதிக்க பலருக்கும் ஆசை உண்டு. அதற்காக எதையும் இழந்து, எவ்வளவு நாளானாலும், எவ்வளவு நேரமானாலும் காத்திருக்க தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்ட சம்பவம்தான் இன்று அரங்கேறியிருக்கிறது.

பெயர் எடுத்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்
அல்போன்ஸ் புத்திரன் மலையாளம் மற்றும் தமிழில் வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவர். பொதுவாக இரண்டு மொழிகளிலும் ஒரு இயக்குநருக்கு ரசிகர்கள் இருப்பது அரிதிலும் அரிது. ஆனால் இரண்டு மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற பெயரைப் பெற்ற இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இவரது பிலிம் மேக்கிங்கிற்கென்று ஒரு ஸ்டைல் உண்டு.

கவனம் ஈர்த்த நேரம்
நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த படம் நேரம். கடந்த 2013ஆம் ஆண்டு ப்ளாக் காமெடி த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. இதன் மூலம் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக மாறினார் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படத்தின் மூலம் அல்போன்ஸின் படத்துக்கென்று எதிர்பார்ப்பும் எகிறியது.

மெகா ஹிட்டான பிரேமம்
நேரம் படத்துக்கு பிறகு பிரேமம் படத்தை இயக்கினார் அல்போன்ஸ் புத்திரன். 2015ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில்தான் சாய் பல்லவி அறிமுகமானார். நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார். கேரளாவில் அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பை விடவும் தமிழில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது அந்தப் படத்துக்கு. அதேசமயம் ஆட்டோகிராஃப் உள்ளிட்ட தமிழ் படங்களின் நவீன வெர்ஷன்தான் பிரேமம் என்ற விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஹிட் பிரேமம்தான்
பிரேமம் படத்துக்கு பின் அவர் இயக்கிய ஆந்தாலஜி படமான அவியல் தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான கோல்டு படமும் தோல்வியையே சந்தித்தது. கோல்டு படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட அல்போன்ஸ் புத்திரன் ஹிட் கொடுத்து 8 வருடங்கள் ஆகிவிட்டதால் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற வேட்கையில் அவர் இருக்கிறார்.

அல்போன்ஸ் புத்திரனின் புதிய படம்
இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறது. இப்படம் தமிழ் - மலையாளம் என பைலிங்குவலாக உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாவது அல்போன்ஸ் புத்திரன் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

ஆடிஷனுக்கு காத்திருந்த இளைஞர்கள்
இந்தச் சூழலில் அல்போன்ஸ் புத்திரன் சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிய படத்தில் கேரக்டர் ரோலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை. எனவே 15 முதல் 55 வயதுவரை இருக்கும் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் ஆடிஷனில் கலந்துகொள்ளலாம். இந்த ஆடிஷன் 7 நாட்கள் நடக்கும் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அறிவிப்பு வெளியான நாளில் இருந்து சென்னை தி.நகரில் இருக்கும் ரோமியோ பிக்சர்ஸ் அலுவலகத்தின் முன் தினமும் நூற்றுக்கணக்கானோர் ஆடிஷனில் கலந்துகொள்ள வரிசைக்கட்டி நிற்கின்றனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











