Youth Box Office: நின்னு விளையாடும் கென் கருணாஸின் யூத்.. பாக்ஸ் ஆபீஸில் பணத்தை அள்ளுறாங்கப்பா!
சென்னை: நடிகர் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள படம் யூத். படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு ஒரு மாத காலமாக புரோமோசன் செய்து வந்த நிலையில், படம் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் வசூலில் எந்த தட்டுப்பாடும் இல்லாமல், பாக்ஸ் ஆபீஸில் நின்று விளையாடி வருகிறது என்று கூறலாம்.
கென் கருணாஸ், இயக்குநராக முதல் படத்திலேயே வெற்றி பெற்றிருப்பது தமிழ் திரையுலகில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதுவும் கதாநாயகனாகவும் அவர் பெற்று வெற்றி பலராலும் பாராட்டப்படுகிறது. நடிகர் சாந்தனு வெளிப்படையாகவே, உங்களது வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாராட்டினார்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்று நினைத்து கென் கருணாஸின் அம்மா கிரேஸ் கருணாஸ் அழுததும், அப்போது மேடையில் இருந்த நடிகர் தனுஷ் ஆசுவாசப்படுத்தியது எல்லாம் பலரது கவனத்தை ஈர்த்தது. தற்போது படத்திற்கு பெருமளவு ரசிகர்கள் ஆதரவு கிடைத்து வெற்றிப் படமாக மாறி வருவதால் மொத்த படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தை ரசிகர்கள் கொண்டாடிய விதத்தை பார்த்த கென் கருணாஸின் அப்பா நடிகர் கருணாஸ், கென்னைக் கட்டிப் பிடித்து, வெற்றிப் படம் என்று தெரிவித்தார்.
படத்திற்கு மிகப்பெரிய பலமாக ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை அமைந்துள்ளது என்று படம் பார்த்த பலரும் தெரிவித்து வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் நடிகர் கென் கருணாஸ்க்கு ரசிகர்கள் மாலை அணிவித்து, சால்வை அணிவித்து, வேல் கொடுத்து ஊக்குவித்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நம்பிக்கை: மார்ச் 19ஆம் தேதி துரந்தர் 2, டாக்ஸிக் போன்ற பெரிய படங்கள் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கென் கருணாஸ் தனது படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் எதுவும் செய்யாமல் உறுதியாக இருந்தார். மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் ஆனது ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் யூத் படத்திற்கு படக்குழுவினர் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான தியேட்டர்கள் கிடைத்தது.
வசூல் நிலவரம்: படம் முதல் நாளில் ரூபாய் 3.60 கோடிகள் வசூலித்ததாக சாக் நிக் வலைதளம் தெரிவித்தது. அதேபோல் இரண்டாவது நாளில் படம் ரூபாய் 3. 50 கோடிகள் வசூலித்துள்ளதாக சாக் நிக் வலைதளம் மார்ச் 21ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி குறிப்பிட்டுள்ளது. இதனால் முதல் இரண்டு நாட்களில் படம் ரூபாய் 7.10 கோடிகள் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் படக்குழு தரப்பில் இதுவரை வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











