மனைவி ஆலியாக்கு ஹர்ட் ஆகிடுச்சு.. அதான் அப்படி நடந்துகொண்டேன்.. யூடியூபர் இர்ஃபான் பலே விளக்கம்
சென்னை: யூட்யூபில் பிரபலமான சேனல் இர்ஃபான்ஸ் வியூ. உணவுகளை விமர்சனம் செய்யும் இவரது சேனலுக்கு என்று பல சப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள், விஜய் சேதுபதி, நெப்போலியன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுடன் இணைந்தும் இவர் வீடியோ போட்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் ரம்ஜான் பண்டிகையையொட்டி உதவி செய்கிறேன் என்று செய்த செயல் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகம் தற்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் வந்துவிட்டதால் பலரும் அதனை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமானவைகளை செய்துவருகின்றனர். அதில் அதிகம் பேர் செய்வது யூட்யூப் சேனல் ஆரம்பிப்பது. பல யூட்யூப் சேனல்கள் இருந்தாலும் தனித்துவமிக்க யூட்யூப் சேனல்களே நிலைக்கின்றன. அப்படி ஒரு சேனல்தான் இர்ஃபான்ஸ் வியூ. விதவிதமாக உணவுகளை சாப்பிட்டு அதை வீடியோவாக பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஏகப்பட்ட மில்லியன் வியூஸ்களை பெறும்.
பிரபலங்களுடன் நட்பு: ஆரம்பத்தில் அவர் போட்ட வீடியோக்கள் ஒவ்வொன்றும் பெரிய ரீச் அடைந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக ஃபேமஸ் ஆனார். அதுமட்டுமின்றி முதலில் திரையுலக பிரபலங்களுடன் நட்பாக ஆரம்பித்து அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டே பேட்டி எடுக்க ஆரம்பித்தார். அது நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் நடிகர் நெப்போலியன் வீட்டுக்கு சென்ற வீடியோவும் ஒர்க் அவுட் ஆனது. திரையுலக பிரபலங்களை தொடர்ந்து அரசியல் தலைவர்களையும் பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.
சர்ச்சையில் சிக்கும் இர்ஃபான்: இப்படி வளர்ந்திருக்கும் இர்ஃபான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குகிறார். முதலில் அவர் ஒரு மூதாட்டியை விபத்து ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. ஆனால் கார்தான் தன்னுடைய அந்த காரை ஓட்டியது தான் இல்லை என்று நழுவினார். அதனைத் தொடர்ந்து தனது மனைவி கர்ப்பமாக இருக்கும்போது உள்ளே இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவதாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார். மேலும் இர்ஃபான் அரசியல்வாதிகளின் நட்பை பயன்படுத்தி தான் செய்யும் குற்றங்களிலிருந்து தப்பிக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இர்ஃபானின் அடுத்த பஞ்சாயத்து: நிலைமை இப்படி நேற்று உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அனைத்து இஸ்லாமியர்களும் மகிழ்வோடு அந்தப் பண்டிகையை கொண்டாடினார்கள். இர்ஃபானோ சாலையோரம் வசிப்பவர்களுக்கு உதவி செய்ய அவரது மனைவியுடன் காரில் கிளம்பினார். அப்போது புது துணியையும், பணத்தையும் வாங்கும்போது எங்கே தங்களுக்கு வராமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஒருசிலர் நடந்துகொண்டார்கள். அதற்கு இர்ஃபான் அடித்த கமெண்ட்டுகளும், உதவி பெற்றவர்களை அவர் நடத்திய விதமும் பெரும் கண்டனத்தை சம்பாதித்தது. பலரும் இர்ஃபானை வெளுக்க தொடங்கினார்கள்.
இர்ஃபானின் விளக்கம்: இவர் என்ன ஜமீனா காரிலிருந்து இறங்கிப்போய்கூட உதவி செய்யமாட்டாரா? மனைவியை ஏன் இவர் அழைத்து செல்ல வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பினார்கள். நேரம் ஆக ஆக இர்ஃபானின் மீதான சமூக வலைதள தாக்குதல் பெரிதாக ஆரம்பித்தது. இந்நிலையில் அவர் இதுகுறித்து கொடுத்திருக்கும் விளக்கத்தில், "அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். மக்களிடம் நான் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக நினைத்துவிட்டார்கள். நான் அவர்களிடம் அப்படி நடந்துகொண்டது அவர்களை புண்படுத்துவதாக தோன்றியிருக்கிறது. அந்தத் தொனியில் நான் நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த சம்பவத்தின்போது மனைவி ஆலியா ஹர்ட் ஆனார். அதனால் நான் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆகிவிட்டேன். ஐ லவ் யூ.." என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











