மனைவியின் பிரசவ வீடியோவால் வந்த சிக்கல்.. இர்பானுக்கு குவியும் கண்டனம்!
சென்னை: இந்த பொறப்புத்தான் நல்ல ருசிச்சி சாப்பிட கிடைத்தது என்ற பாடலுக்கு ஏற்றால் போல, நல்ல சுவையான உணவு எங்கே கிடைக்கும் என தேடி தேடி ருசித்து ருசித்து சாப்பிட்டதை தனது சேனலில் பதிவிட்டு பிரபலமானவர் தான் இர்பான். உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை விதவிதமான உணவை சுவைத்து ரிவ்யூ கொடுக்கும் புட் விலாகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.
இவர், ரசித்து சாப்பிடுவதை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் ஒன்று உள்ளது. யூடியூபில் 30 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை வைத்து இருக்கும் இர்பான் தமிழ் நாட்டின் டாப் யூடியூபர்களில் ஒருவராக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இவர், மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

வீடியோவை டெலிட் செய்தார்: யூடியூபரான இர்பான் கடந்த ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த ஆசிபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். புட் ரிவ்யூ கொடுத்து வந்த இர்பான், தனது திருமணத்தை தொடர்ந்து திருமண வீடியோ, மனைவியுடன் வெளிநாடு சென்ற வீடியோ, மனைவி உடன் சேர்ந்து சமைத்த வீடியோக்களை பதிவிட்டு தன் மனைவியையும் யூடியூபராக மாற்றினார். இதனிடையே தன்னுடைய மனைவி ஆசிபா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தனக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை டெஸ்ட் எடுத்து தெரிந்துகொண்டு அதை அந்த விழாவில் அறிவித்தார். இந்தியாவில் இது சட்டப்படி குற்றம் என்பதால் துபாய்க்கு சென்று இந்த வேலையை செய்திருந்தார் இர்பான். அவரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டார்.
பிரசவ அறை வீடியோ: கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது, குழந்தையின் கையை பிடித்தபடி இருக்கும் போட்டோவை இர்பான் வெளியிட்டு இருந்தார். குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆனநிலையில், தனது இன்ஸ்டாகிராமில் மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், ஆசிபா பிரசவ வலியால் அவதிப்பட்டதையும், ஆசிபாவுக்கு நான் உன்னோடு தான் இருக்கின்றேன் என தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.மேலும், தனது மகளின் முகத்தை முதன் முறையாக அந்த வீடியோவில் காட்டி இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் குழந்தை ஆசிபா போல் இருப்பதாக கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

சர்ச்சையில் சிக்கிய இர்பான்: இந்த பிரசவ வீடியோ தான் தற்போது யூடியூபர் இர்பானை சிக்கலில் சிக்கவைத்துள்ளது.தனியார் மருத்துவமனையில் தனது மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது, அறுவை சிகிச்சை அறையில் இருந்த இர்பான், மனைவியின் தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற காட்சி அந்த வீடியோவில் இருந்தது. இதுதான் இர்பான் சர்ச்சையில் சிக்க காரணமாக அமைந்துள்ளது. இது தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











