அலிஷா அப்துல்லா அளித்த புகார்.. போலீசுக்கு பயந்து ஓடி ஒளிந்த யூடியூபர் முக்தார் கைது
சென்னை: பாஜக பெண் நிர்வாகியும், இந்தியாவின் முன்னணி பெண் ரேஸரும், நடிகையுமான அலிஷா அப்துல்லாவின் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் குறித்து யூடியூபில் ஆபாசமாக அவதூறு பரப்பிய வழக்கில், தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலிஷா அப்துல்லா புகார்: அலிஷா அப்துல்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரில், தனக்கு அண்மையில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் குறித்து, பொதுவெளியில் பேசக்கூட கூசும் அளவிற்கு மிகவும் ஆபாசமான, வக்கிரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் என்னை விமர்சித்து இருந்தார்கள். நான் மட்டும் மன வலிமையோடு இல்லை என்றால் உயிரை மாயித்துக்கொண்டு இருப்பேன். என் பெற்றோர், என் கணவரின் ஆதரவால் நான் உறுதியாக இருக்கிறேன். வேறு ஏதேனும் குடும்பமாக இருந்தால், விவாகரத்து வரை சென்று இருக்கும்.
கண்ணீர் பேட்டி: ஒரு பெண்ணாகவும், சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீராங்கனையாகவும், ஒரு அரசியல் கட்சி நிர்வாகியாகவும் இருக்கும் தன் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தனிப்பட்ட முறையில் ஆபாசச் சேற்றை வாரி இறைத்து, ஒட்டுமொத்தப் பெண்களின் மாண்பையும் இவர்கள் சிதைக்கிறார்கள். இவர்களின் அசிங்கமான பேச்சால் மன உளைச்சலும் ஆளாவதாக அலிஷா அப்துல்லா புகார் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

முக்தார் கைது: அலிஷா அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கினர். இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி சூர்யா ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், போலீஸ் கைதுக்கு பயந்து யூடியூபர் முக்தார் தமிழ்நாட்டை விட்டு ஓடி, அண்டை மாநிலமான கர்நாடகாவில் தலைமறைவாக இருந்தார். தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த சென்னை சைபர் கிரைம் போலீசார், கர்நாடகாவில் முக்தார் ஒளிந்திருந்த இடத்தை அலாதியாகக் கண்டுபிடித்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
அலிஷா அப்துல்லா பதிவு: முக்தார் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த அலிஷா அப்துல்லா, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு அரசுக்கும், காவல் துறைக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சற்றுமுன் எனக்குத் தகவல் கிடைத்தது. கர்நாடகாவில் முக்தார் கைது செய்யப்பட்டுள்ளார். நன்றி தமிழ்நாடு சிஎம் விஜய் என்று அலிஷா அப்துல்லா பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications