சாக்கடையை சுத்தம் செய்து.. படிப்படியாக முன்னேறிய யூடியூபர் ராகுல் டிக்கி.. சாலை விபத்தில் உயிரிழப்பு!
சென்னை: பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது சப்ஸ்கிரைபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். இணையத்தில் அவருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் சோஷியல் மீடியா என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதில், நகைச்சுவை, பாட்டு, சமையல், நடனம், கூத்து, பிராங்க் என பலர் தங்களின் திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் பதிந்த வீடியோ கிரியேட்டர் தான் ராகுல் டிக்கி, அவரின் நகைச்சுவை வீடியோவை பார்த்து சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து இருப்பார். இவருடைய சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

கதறும் ரசிகர்கள்: இப்படி ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த ராகுல், நேற்று இரவு 10.30 மணி அளவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஈரோட்டில் வசித்து வரும் கவுந்தம்பாடி என்ற இடத்தில் உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இணையத்தில் அவர் விபத்தில் சிக்கிய போட்டோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த தகவலை கேள்வி பட்ட ரசிகர்கள் இணையத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர், எங்களை சிரிக்க வைத்து அழகுப்பார்த்த உங்களுக்கா இந்த நிலைமை என்றும், சிரிக்க வெச்சது போதும்னு கடவுள் உன்னைய வர சொல்லிட்டாரா? என இரங்கல் பதிவினை வெளியிட்டு வருகின்றனர்.
சாக்கடையை சுத்தம் செய்தேன்: அண்மையில் ராகுல் டிக்கி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், நான் பால்டெக்னிக் படித்துக்கொண்டிருந்த போது, அப்பா, அம்மாவை விட்டு பிரிந்துவிட்டார். இதனால், என்னால் படிப்பை தொடரமுடியாமல் போய்விட்டது. அதன்பின், செருப்புக்கடை சாக்கடையை சுத்தம் செய்வது என பல வேலைகளை செய்து இருக்கிறேன். என்னுடைய கனவே, அம்மாவை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும், என்னுடைய கனவே குடிசையாக இருந்தாலும், அது சொந்த வீடாக இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார். தற்போது, அவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











