என் மகன் சாவுக்கு காரணம் மருமகள் தான்.. கதறி அழுத யூடியூபர் ராகுல் டிக்கியின் தாய்!
சென்னை: இன்ஸ்டாகிராம், பேஸ் புக், யூடியூப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக அறியப்பட்ட ராகுல் டிக்கி, சாலை விபத்தில் உயிர் இழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மனைவி தேவிகா, ராகுலோட அம்மா முஸ்லிம், அப்பா இந்து தான். ஆனால் திடீர்னு முஸ்லிம் முறைபடி தான் உடலை அடக்கம் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. அதனால என்ன இறுதி சடங்குல கூட சேர்த்துக்கவே இல்லை என்று கண்ணீருடன் பேசி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசி இருந்த ராகுலின் அம்மா, என் மகனைப் பார்க்காமல் நான் ஒரு நாள் கூட இருந்தது இல்ல. இனி நான் எப்படி வாழ போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. கையோ, காலோ ஏதாவது ஒன்று போயிருந்தால் கூட என் மகனை நான் உட்கார வைத்து பார்த்து இருப்பேன். ஆனால், என் மகனே போய் விட்டான் இதை தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இனிமேல் நான் எந்த கடவுளையும் கும்பிடபோவதில்லை, ஒரு கடவுள் கூட என் மகனை காப்பாற்றாத போது நான் ஏன் இனிமேல் கடவுளை கும்பிட வேண்டும். இனிமேல் என் மகன் தான் எனக்கு கடவுள்.

மருமகள் தான் காரணம்: எல்லா சேனலிலும் என்னுடைய மருமகள், ராகுல் டிக்கி முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சொல்லி வருகிறாள். ஆனால் அதில் உண்மை இல்லை, அவளுக்கு முதல் திருமணமாகி அந்த பெண் ஆறு மாதம் வாழ்ந்தது நன்றாக தெரியும். அந்த பெண் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டாள். அதன் பிறகு தான், தேவிகாவை திருமணம் செய்து கொண்டான். என் மருமகளை நான் பெண் போலத்தான் பார்த்தேன். ஆனால், ஆறு மாதம் ஒழுங்காக இருந்த அந்த பெண் திடீரென வீட்டில் தனி குடுத்தனம் போக வேண்டும் என்று சொல்லி அம்மா வீட்டிற்கு பக்கத்திலேயே போய்விட்டாள், நானும் மகன் நன்றாக இருந்தால் போதும் என நினைத்து விட்டு விட்டேன்.

என்கூட பேசி இருக்கலாம்: என் மகன் இறந்த நாளில் வீட்டில் பெரிய சண்டை, மருமகளை அழைத்துக்கொண்டு போக அவரது அம்மா வந்துவிட்டார். அதனால் அவர்களுக்கு முன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வேகமாக பைக்கை ஓட்டி சென்று விபத்தில் சிக்கி இறந்துவிட்டான். விபத்திற்கு காரணமே மருமகளும் அவரின் அம்மாவும் தான். அந்த நேரம் என் மகன் என்னிடம் பேசி இருந்தால், நான் அவனை சமாதானப்படுத்தி இருப்பேன் இந்த விபத்தே நடந்து இருக்காது.
கதறிய தாய்: மகனை பறி கொடுத்துவிட்டு ஒரு அம்மாவாக நான் ஆதங்கப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். நான் ஆதங்கத்தில் தான் இறுதி சடங்கிற்கு வரக்கூடாது, உன்னால் தான் இப்படி ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டேன். ஆனால், இறந்து போனது அவளின் கணவன் தானே, என்னிடம் சண்டை போட்டாவது அந்த இடத்தில் அந்த பெண் வந்து இருக்க வேண்டுமே, ஏன் வரவில்லை. இப்போதும் சொல்கிறேன் என்னுடைய மகனின் இறப்புக்கு காரணம் என் மருமகள் தான். அவள் மட்டும் அன்று அம்மாவுடன் போகாமல் இருந்திருந்தால் இது நடந்தே இருக்காது.

நான் என் மருமகள் குறித்து எந்த தவறான விஷயத்தையும் எந்த சேனலிலும் சொல்லவில்லை. ஆனால், அவள் என் மகன் பற்றியும் என்னை பற்றியும் பேசி வருகிறார். என் மகன் எந்தவித போதை பழக்கத்திற்கும் அடிமையானவன் இல்லை என ராகுல் டிக்கியின் தாய் கண்ணீர் மல்க அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











