Yuvan: ராசியில்லாத மியூசிக் டைரக்டர்னு சொன்னாங்க.. உடைஞ்சு போய் அழுதேன்.. யுவனின் கண்ணீர் பக்கங்கள்!
சென்னை: யுவன். இது வெறும் பெயர் மட்டும் இல்லை, சோகத்தில் இருக்கும் மனிதனை ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டவனின் பெயர். துக்கத்தில் இருப்பவர்கள் துயர்துடைக்க தேடி அலையும் அடைக்கலம். ஒருதலைக் காதலோ, காதல் பிரிவோ, காதல் முறிவோ என எது இருந்தாலும் தனது இசையால் அனைவருக்கும் ஆறுதல் சொல்லக்கூடிய, குஷி படுத்தக்கூடிய ஆகச்சிறந்த இசை அமைப்பாளர். இன்றைக்கும் இணையத்தில் இவரின் பாடல்களை யுவன் ட்ரக்ஸ் எனத் தேடினால் போதும். அவரது இசையில் நம்மை மூழ்கடிக்கச்செய்துவிடுவார். எத்தனையோபேரின் கண்ணீருக்கு ஆறுதல் கூறிய யுவன் சங்கராஜாவை ராசியில்லாத இசை அமைப்பாளர் என தமிழ் சினிமா கூறியுள்ளது என்றால் நம்ப முடிகின்றதா?
ஆனால் அதுதான் உண்மை. யுவன் சங்கர் ராஜா தான் இயக்கிய படங்களில் நல்ல பாடல்களைக் கொடுத்தாலும், படங்கள் சரியாகப் போகவில்லை. இதனால் இவரை தமிழ் சினிமா உலகம் ராசியில்லாத இசை அமைப்பாளர் எனக் கூறி ஓரம் கட்டினர். இன்றைக்கு இவரது இசை குறித்து பலரும் பாராட்டினாலும், அன்றைக்கு யுவன் சங்கர் ராஜாவுக்கு ஆதரவாக நின்றவர் நடிகர் அஜித்குமார் மட்டுமே. இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

அவர் அளித்த பேட்டியில், " பூவெல்லாம் கெட்டுப்பார் படத்திற்குப் பின்னர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு நான் எந்தப் படத்திற்கும் இசை அமைக்கவில்லை. காரணம் என்னை ராசியில்லாத இசை அமைப்பாளர் என நமது சினிமா உலகினர் கூறினார்கள். எனக்கு கஷ்டமாக இருந்தது. பாடல்கள் அனைத்தும் ஹிட், ஆனால் படம் ஓடவில்லை. அதற்கு நான் என்ன செய்யமுடியும் என அழுதிருக்கின்றேன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அஜித் சார்தான் எனக்கு தீனாவில் வாய்ப்பு கொடுத்தார்.
அஜித்: இது தொடர்பாக பேச அவர் எனது வீட்டிற்கே வந்தார். யுவன் உங்களுக்கு நான் இந்தப் படத்தைக் கொடுக்கின்றேன், உங்களுடைய பெஸ்ட் நீங்க கொடுங்க எனக் கூறினார். தீனா படத்திற்குப் பின்னர் துள்ளுவதோ இளமை படம் வந்தது. அதில் இருந்து அப்படியே எல்லாம் மாறிவிட்டது. 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் சிறப்பாக இசை அமைந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அந்தக் கதாபாத்திரங்களில் நான் என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்வதுதான். அதனால்தான் என்னால் இந்த அளவுக்கு மியூசிக் கொடுக்க முடிந்தது" எனக் கூறினார். யுவனின் இந்தப் பேச்சு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

யுவன்: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கக்கூடியவர் யுவன் ஷங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ள யுவன் ஷங்கர் ராஜா, படங்கள் இயக்கவும் தனக்கு விருப்பம் இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா அண்மையில் இவரது இசையில் விஜய்யின் கோட் படம் ரிலீஸ் ஆனது.

இசை: இந்தப் படத்தின் பாடல்களுக்கு தொடக்கத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அதன் பின்னர் இணையத்தில் கொண்டாடப்படும் பாடல்களாக உருமாறியது. இதுமட்டும் இல்லாமல், படத்தில் இருக்கும் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. யுவனைப் பொருத்தவரையில் கதையின் தன்மை அறிந்து அதற்கு ஏற்ற அளவிற்கு பின்னணி இசை அமைக்கூடியவர். குறிப்பாக பில்லா, பில்லா 2, மங்காத்தா, ஆரம்பம், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் மாஸான இசையை வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல், பையா, துள்ளுவதோ இளமை, மன்மதன், யாரடி நீ மோகினி, பேரன்பு உள்ளிட்ட படங்களில் அன்பை இசையால் உருவகப்படுத்தியிருப்பார்.


Click it and Unblock the Notifications











