மன அழுத்தத்தை போக்கும் மருத்துவர்.. யுவன் சங்கர் ராஜாவின் யூடியூப் சேனலில் புதிய பட்டம்!
சென்னை: மன அழுத்தத்தை போக்கும் மருத்துவராக மாறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.
விஜய்சேதுபதியின் மாமனிதன் படத்திற்கு தந்தை இளையராஜாவுடன் இணைந்து முதல் முறையாக இசையமைத்து வருகிறார்.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள மாமனிதன் படத்தின் இரண்டாம் பாடலான ஏ ராசா வீடியோ பாடல் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா மகன்
1997ம் ஆண்டு வெளியான சரத்குமாரின் அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. தனது மாய இசையால் உலகத் தமிழர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் இளையராஜாவின் மகனான இவர் தந்தைக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என நிரூபித்து வருகிறார்.

பிஜிஎம் கிங்
தல அஜித்தின் தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம் ரிலீசுக்கு காத்திருக்கும் வலிமை என மாஸ் பிஜிஎம்களை போட்டு பிஜிஎம் கிங் என இசை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளார் யுவன் சங்கர் ராஜா. தனுஷின் புதுப்பேட்டை படத்தின் பிஜிஎம் மாரி 2 படங்களின் பிஜிஎம்மும் ரசிகர்களின் ஃபேவரைட் தான்.

டிப்ரெஷன் ஹீலர்
U1 ரெகார்ட்ஸ் எனும் தனது யூடியூப் தளத்தில் "Depression healer" என ரசிகர்கள் அழைப்பதாக யுவன் சங்கர் ராஜா பற்றிய குறிப்பில் வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், யுவனின் ரசிகர்கள் மன அழுத்தங்களை போக்கும் மருத்துவர் தான் அவர் என்றும் கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர்.

மனதை லேசாக்கும் ராசா
தீனாவின் "சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்" பாடலை இப்போது கேட்டாலும் மனம் லேசாகி விடும். அதே போல காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆல்பம் பாடல்களுக்கெல்லாம் ஏகப்பட்ட ரசிகர்கள் அடிமை.
இசை மருந்து
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள மாமனிதன் படத்தின் செகண்ட் சிங்கிளான ஏ ராசா பாடல் இந்த கொரோனா காலத்தில் மன அழுத்தங்களை போக்கும் மருந்தாக அமையும் என்கிற குறிப்புடன் வீடியோ வெளியாகி இருப்பது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











