குரானை மேற்கோள் காட்டியதால் சர்ச்சை.. ட்விட்டரில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை.. மீண்டும் வந்தார்!
மும்பை: சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை, மீண்டும் அதில் இணைந்துள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகை ஸாய்ரா வாசிம். ஆமிர்கானின் தங்கல் படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், அடுத்து சீக்ரட் சூப்பர்ஸ்டார், த ஸ்கை இஸ் பிங்க் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர், வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து குரானை மேற்கோள் காட்டி, சமீபத்தில் பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

அத்தாட்சிகளாக
அதாவது, 'ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன் பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரிபவர்களாகவே ஆகியிருந்தனர்' குரான் 7:133' என்ற வாசகத்தை மேற்கோள் காட்டியிருந்தார்.

திடீரென வெளியேறினார்
இது சர்ச்சையானது. வெட்டுக்கிளிகளை நியாயப்படுத்தியதாகக் கூறி, அவருக்கு எதிராக பலர் சரமாரியான கருத்துக்களைக் கூறினர். சிலர் கடுமையாகத் திட்டி பதிவிட்டனர். ஒரு சிலர் அவருக்கு ஆதரவளித்தாலும் எதிர்ப்பு அதிகமானதை அடுத்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து அவர் திடீரென்று வெளியேறினார்.

வெறுப்பது நியாயமல்ல
தனது கணக்குகளையும் நீக்கினார். ஆனால் பேஸ்புக்கில் இருந்து விலகவில்லை. இந்நிலையில் அவர் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் இருந்து அவர் வெளியேறிய பின்பு, பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக #StandWithZaira என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். அவர் குரானை மேற்கோள் காட்டியது தவறல்ல என்றும் அதற்காக அவரை வெறுப்பது நியாயமல்ல என்றும் தெரிவித்தனர்.

சோசியல் மீடியா
இன்னும் சிலர் அவருக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறதென்றும் அவர் சொன்னதில் தவறேதும் இல்லை என்றும் குரானில் இருந்து மேற்கோள் மட்டுமே காட்டியுள்ளார் என்றும் கூறினர். பின்னர் சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய ஸாய்ரா, ஒரு நாளுக்குப் பிறகு நேற்று சமூக வலைத்தளத்துக்கு மீண்டும் வந்தார்.

அனுமதி இருக்கிறது
அவர் ஏன் ட்விட்டரில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஒருவர் கேட்டதற்கு பதிலளித்துள்ள ஸாய்ரா, ஏனென்றால் எல்லோரையும் போல நானும் ஒரு மனுஷியாக இருக்கிறேன். என் மண்டைக்குள் அல்லது என்னைச் சுற்றி அதிகமான சத்தம் கேட்கும்போதெல்லாம் எல்லாவற்றில் இருந்தும் வெளியேற அனுமதி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











