ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு படம்.. டாடாவாக வாழ நடிகர்களை தேடும் இயக்குநர்!
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா. 86 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக புதன் கிழமை உயிரிழந்தார். அவரது மறைவு பலரையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக ஜீ குழுமம் அறிவித்து இருக்கிறது
டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த ரத்தன் டாடா, கடந்த 2012ம் ஆண்டு ஒய்வு பெற்றார். பல லட்ச இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக தொழில்துறை அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்தவர் ரத்தன் டாடா. வயது மூப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக திங்கட்கிழமை மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல், புதன்கிழமை உயிரிழந்தார்.

ரத்தன் டாடா: தொழில் உலகில் மட்டுமல்லாமல், சமூக சேவை துறையிலும் சிறந்தவராக விளக்கிய ரத்தன் டாடா, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வந்தார். அவரது மறைவு இந்திய தொழில் உலகிற்கு மட்டுமல்லாமல், நாட்டிற்கே பேரிழப்பாகும். ரத்தன் டாடாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இறுதி அஞ்சலி: ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பின் வீட்டில் இருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் தெற்கு மும்பையில் உள்ள என்சிபிஏ மையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு மகாராஷ்டிரா முதல்வர், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ், ரிலையன்ஸ் குடும்ப தலைவர் முகேஷ் அம்பானி, அதானி என பல தொழிலதிபர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, மும்பை ஒர்லியில் தேசிய கொடி போர்த்தப்பட்டு ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
வாழ்க்கை வரலாறு: இந்நிலையில், ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்போவதாக ஜீ குழுமம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சிஇஓ புனித் கோயங்கா இதனை தெரிவித்து இருக்கிறார். இதற்காக, அவரின் குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெற இருப்பதாகவும், அனுமதி கிடைத்த பிறகு, ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் எடுக்கப்படும் என அவர் கூறி இருக்கிறார். இளைஞர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றில், ரத்தன் டாடாவாக எந்த ஹீரோ நடித்தால் சரியாக இருக்கும் என்று நெட்டிசன்கள் இப்போதே பேசத் தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











