'ழகரம்'... புதையலை தேடிச் செல்லும் இளைஞர்கள்... பல விருதுகளை வென்ற நாவல் ப்ராஜெக்ட் படமாகிறது!
பல விருதுகளை வென்ற ப்ரொஜெக்ட் நாவல் படமாக உருவாகியுள்ளது.
Recommended Video

சென்னை: பல விருதுகளை வென்ற 'ப்ரொஜெக்ட்' எனும் நாவல் ழகரம் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.
வெளிநாடுகளில் நாவல்களை படமாக்குவது இயல்பாக நடைபெறும் விஷயம். ஆனால் தமிழில் இம்முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது. பத்ரகாளி, முள்ளும் மலரும், மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி ,அரவான், விசாரணை போன்ற கையடக்க எண்ணிக்கையிலான படங்களே நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளன.
இந்த படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன. விருதுகளையும் பெற்றுள்ளன. அந்த வரிசையில் பல விருதுகளை பெற்ற ப்ராஜெக்ட் எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'ழகரம்.'
இப்படம் குறித்து படக்குழு கூறியதாவது,

நாவலை தழுவிய ழகரம்
"பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில் ,நந்தா நடிப்பில் , தரன் இசையில் , அறிமுக இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கிறது இந்த 'ழகரம்' திரைப்படம் .

பல விருதுகளை பெற்ற நாவல்
பல விருதுகளைப் பெற்ற ' ப்ராஜெக்ட் ' நாவலின் தழுவல் இது. இத்திரைப்படம் ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

கார்ப்பொரேட் சூழல்
தற்போதைய காலத்தில், படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கும் கதை, வரலாற்றுச் சின்னங்களாக விளங்கும் மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது.

நாயகனாக நந்தா
சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் மறுபிரவேசம் எடுத்த நந்தா, சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் கதாநாயகனாக நடிப்பதால் இந்தத் திரைப்படம் அவருக்குத் திருப்பு முனையாக அமையும்.

வரலாற்று விஷயங்கள்
படத்தின் இடையிடையே தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விவரங்களையும் காட்சிகளாக்கிக் கதையுடன் கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
டிரைலர் வெளியீடு
''அடுத்து என்ன நடக்கப் போகிறது?'"என்று ஒவ்வொரு நிமிடமும் நம்மை கொக்கி போட்டு விறுவிறுவென இழுத்துச் செல்கிறது கதை. சமீபத்தில் இந்தப் படத்தின் பாடலை இயக்குநர், கவுதம் மேனன் வெளியிட்டார். படத்தின் டிரைலர் கிறிஸ்துமஸ் பண்டிககையையொட்டி நேற்று வெளியானது.


Click it and Unblock the Notifications











