3 நாள் கூட தியேட்டரில் ஓடமாட்டேங்குது.. 8 வார ஓடிடி.. கமலின் பிளான் சாதகமா?.. பாதகமா?
சென்னை: முன்பெல்லாம் சன் டிவியில் "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ புதிய படங்களை போடுவார்கள். புதிய படங்கள் வெளியாகி சுமார் 3 மாதங்கள் கழித்து தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அப்போது கூட ஏகப்பட்ட மக்கள் டிவியில் புதிய படங்களை பண்டிகை நாட்களில் கண்டு கழித்து டிஆர்பி ரேட்டிங்கை எகிற விடுவார்கள்.
ஆனால், இந்த ஓடிடி காலத்தில் புதிய படங்கள் வெளியாகி 4 வாரங்களிலேயே வீட்டில் குடும்பத்துடன் கும்பலாக பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டன. மேலும், ஆங்கிலம், கொரியன் என அனைத்து மொழி வெப்சீரிஸ்களும், படங்களையும் தினமும் ரசிகர்கள் ஓய்வுக் கிடைக்கும் நேரங்களில் ஓடிடியில் பார்த்து விடுகின்றனர்.

சில் வித் நெட்பிளிக்ஸ் என கேர்ள்ஃபிரெண்டுடன் தனியாக ஓடிடி டேட்டிங் எல்லாம் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தக் லைஃப் படம் ஓடிடியில் 8 வாரங்களுக்குப் பிறகு தான் வெளியாகும் என கமல்ஹாசன் புதிய முயற்சியை தமிழ் சினிமாவில் முன்னெடுத்துள்ள நிலையில், பலரும் இதனை கடைபிடிப்பார்களா? இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம் என்பது குறித்து சினிமா விமர்சகர் அந்தணனிடம் பேச்சுக் கொடுக்க, அதில் கிடைத்த பதில்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
ரிலீஸை முடிவு செய்யும் ஓடிடி நிறுவனங்கள்: புதிய படங்கள் எந்த தேதியில் வெளியாக வேண்டும் என்பதையே சில ஓடிடி நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன என்கிற சூழல் தான் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது. ஒரு சில படங்கள் ஓடிடி விற்பனையில் பெரிய லாபத்தை பார்த்துவிட்ட நிலையில், 2 வாரங்களில் எல்லாம் ஓடிடிக்கு வருவதும் நயன்தாராவின் டெஸ்ட் போன்ற ஒரு சில படங்கள் நேரடியாக ஓடிடியிலேயே வெளியாவதையும் பார்த்து வருகிறோம். புதிய படங்களை ஓடிடி நிறுவனங்கள் பெரிய தொகைக்கு வாங்கவில்லை என்றால், அந்த படங்கள் ரிலீஸ் ஆகமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பதையும், லாபம் அடையாமல் நஷ்டத்தை சந்திக்கும் சூழல்களும் உருவாகி வருகின்றன.

4 வார ஓடிடி ரிலீஸ்: கொரோனா லாக்டவுன் காலத்தில் தான் ஓடிடி நிறுவனங்களின் கரங்கள் தமிழ் சினிமாவில் ஓங்கத் தொடங்கின. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தொடர்ந்து சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. கொரோனா காய்ச்சல் தொல்லை குறைந்தாலும் ஓடிடியில் புதிய படங்கள் 4 வாரங்களில் வெளியாகி வரும் சூழலில் மக்கள் தியேட்டர் பக்கமே போவதை நிறுத்திக் கொண்டனர். ஓடிடியில் 4 வாரங்களில் வெளியாகும் புதிய படங்கள் டெலிகிராமில் பைரசியாக 3 வாரங்களில் வெளியாக அதனையும் பலர் டவுன்லோடு செய்து பார்க்கத் தொடங்கி விட்டனர்.
அடிவாங்கிய ஓடிடி நிறுவனங்கள்: ஓடிடி நிறுவனங்கள் பெரிய தொகை கொடுத்து படங்களை வாங்குவதை அறிந்துக் கொண்ட தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் முன்னணி நடிகர்களும் கதையை பற்றியெல்லாம் யோசிக்காமல் சகட்டு மேனிக்கு படங்களை கமிட் செய்து நடித்து ஓடிடி தலையில் கட்டி கல்லா கட்ட ஆரம்பிக்க, ஓடிடி நிறுவனங்களும் அடிவாங்கத் தொடங்கி விட்டன.
8 வார ஓடிடி ரிலீஸ்: இந்தியில் இன்னமும் 8 வாரங்கள் கழித்து தான் புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகும் நடைமுறை இருக்கிறது. அதே பாணியை தமிழ் சினிமாவுக்கும் கொண்டு வரவேண்டும் என்கிற முடிவை தற்போது தக் லைஃப் படத்தின் மூலம் கமல்ஹாசன் கொண்டு வந்திருக்கிறார். நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தக் லைஃப் படத்தை நல்ல தொகைக்கு வாங்கிய நிலையிலும், 8 வாரங்கள் கழித்து ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறது.
3 நாள் கூட ஓடமாட்டேங்குதே: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான பல படங்கள் ஒரு நாள் கூட ஹவுஸ்ஃபுல்லாக தியேட்டர்களில் ஓடவில்லை. அஜித் குமாரின் விடாமுயற்சி, விக்ரமின் வீர தீர சூரன் உள்ளிட்ட படங்கள் 3 நாட்களுக்குப் பிறகு பெரிதாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக 2வது வாரத்தைக் கூட கடக்கவில்லை என்கின்றனர். கடந்த வாரம் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் உள்ளிட்ட படங்களும் திங்கட்கிழமையானதும் படுத்து விட்டன. ஒவ்வொரு வாரமும் டஜன் கணக்கில் புதிய படங்கள் ரிலீஸ் வேற இருப்பதால், 8 வாரங்கள் வரை புதிய படங்களை தியேட்டர் ஓனர்களே ஓட்டமாட்டார்கள் என்றும் பெரிய படங்கள் முதல் சிறிய படங்கள் வரை பெரிய அடியை இதனால் வாங்கும் என அந்தணன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். கமல்ஹாசன் எடுத்துள்ள முயற்சி நல்ல முயற்சி தான். ஆனால், அதற்கு நம் தமிழ் சினிமாவில் நல்ல படங்களை இயக்குநர்கள் தொடர்ந்து தர வேண்டும். தக் லைஃப் படம் ரிலீஸாகி அதன் விமர்சனங்களையும் அதன் ஓட்டத்தையும் பொறுத்து தான் இந்த நடைமுறை தொடருமா? அல்லது மாறுமா என்பது தெரியவரும் என்றார்.


Click it and Unblock the Notifications











