Maharaj Review: பாத சேவைன்னு பார்த்தா பலான சேட்டையாவுல இருக்கு.. அமீர் கான் மகனின் மகாராஜ் விமர்சனம்
மும்பை: அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாக அறிமுகமாகி உள்ள மகாராஜ் படம் ஓடிடியில் நேரடியாக வெளியானது. அமீர்கான் மனைவி கிரண் ராவ் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த படத்தை தொடர்ந்து நெட்பிளிக்ஸில் பல தடைகளை கடந்து வெளியான மகாராஜ் திரைப்படம் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸில் டப்பிங் பிரச்சனை ஏதுமின்றி பக்காவாக வெளியான இந்த படத்தின் நிறை மற்றும் குறைகள் குறித்து இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம் வாங்க..

இந்த படத்தின் கதை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 1862ம் ஆண்டு நடைபெற்ற மகாராஜ் வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குஜராத் நீதிமன்றம் தடை: இந்து மக்களின் உணர்வுகளை அமீர்கானை போலவே அவரது மகனும் புண்படுத்துகிறார் என்றும் இந்து சாமியார்களை இழிவாக சித்தரிக்கும் இந்த படம் வெளியாகக் கூடாது என குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒரு வார காலத்திற்கு படத்தின் ரிலீஸ் தேதி முடக்கப்பட்டது. ஆனால், தடைகளை கடந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியான நிலையில், அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மகாராஜ் கதை என்ன?: மும்பையில் ஹவேலி எனும் இடத்தில் நான் தான் கடவுள் என ஜதுநாத் மகாராஜ் வாழ்ந்து வருகிறார். அவரை அந்த ஊரே கொண்டாடுகிறது. தினமும் அவரை தரிசிக்க பலர் ஹவேலிக்கு வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களை தேர்வு செய்து தனக்கு பாத சேவை செய்ய வேண்டும் என அழைத்துச் செல்கிறார். ஹீரோ கர்சன் தாஸை (ஜுனைத் கான்) திருமணம் செய்துக் கொள்ள நிச்சயிக்கப்பட்ட கிஷோரி (ஷாலினி பாண்டே) பாத சேவை செய்ய செல்கிறார். பாத சேவை என்கிற பெயரில் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் மகாராஜின் கீழ்த்தரமான செயலை அறிந்துக் கொள்ளும் கர்சன் தாஸ் அதற்கு பிறகு கிஷோரியை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் எனக் கூற, தான் குருஜியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்ளும் கிஷோரி தற்கொலை செய்துக் கொள்கிறார்.
மகாராஜ் என்றும் தான் தான் கடவுள் என்றும் பாத சேவையை பார்த்தால் மோட்சம் கிடைக்கும் என ஊரில் உள்ள ஆண்களிடம் காசு வாங்கிக் கொண்டு அந்த கன்றாவி காட்சிகளை பார்க்கவும் அனுமதித்து வருவதை எதிர்த்து அந்த ஊரில் உள்ள பெண்களை காப்பாற்ற வேண்டும் என நினைத்து தாதாபாய் நவ்ரோஜி மற்றும் சிலருடன் நட்பு பாராட்டி பத்திரிகையை நடத்தி எதிர்க்கிறார்.
தன்னைப் பற்றி அவதூறு பரப்பிவிட்டார் என ஹீரோ மீது 50 ஆயிரம் (அப்போது அது பெரிய தொகை) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர மகாராஜுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் நாயகனுக்கு அனைத்து முயற்சிகளும் தோல்வியை கொடுக்க இறுதியில் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.
சாட்டையடி பதிவு: ஜதுநாத் மகாராஜ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஜெய்தீப் அஹ்லாவாட் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காட் மேன் கதாபாத்திரத்தில் எந்தவொரு அலட்டலும் இல்லாமல் காட் மேனாகவே காட்சி தருகிறார். மும்பை சுப்ரீம் கோர்ட்டுக்கு கிளைமேக்ஸில் அவர் வருகை தருவது தனது சிம்மாசனத்தில் அமர்ந்து வழக்கை சந்திப்பது என அனைத்து இடங்களிலும் செம ஸ்கோர் செய்கிறார்.

அரும்பு மீசை வைத்துக் கொண்டு அமீர்கானின் மகன் ஜுனைத் கான் முதல் படத்தில் நடிப்பது போலவே தெரியாமல் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடித்து கலக்குகிறார். ஷாலினி பாண்டே, ஷர்வாரி வாக் உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். கடவுளுக்கு எதற்கு இடை தரகர்கள் என்கிற வாதத்தை நீதிமன்றத்தில் கர்சன் தாஸ் பேசும் இடங்களில் எல்லாம் கூஸ்பம்ப்ஸ் வருகிறது.
பிளஸ்: மேக்கிங் மற்றும் பட்ஜெட் உள்ளிட்டவை இந்த ஓடிடி படைப்புக்கு சரியாகவே அமைந்திருக்கிறது. ஹவேலியை காட்டுவதும், நீதிமன்ற செட்டப் என 1862 காலக்கட்டத்தை கச்சிதமாக கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். நடிகர்கள் நடிப்பு மற்றும் வசனங்கள் தெறியாக உள்ளது. சொல்ல வந்த கருத்தை இயக்குநர் சித்தார்த் மல்கோத்ரா உரக்கச் சொல்லியிருப்பதே படத்திற்கு பலம்.
மைனஸ்: கருத்து ஸ்ட்ராங்காக இருக்கும் அளவுக்கு காட்சிகளாகவும் திரைக்கதை வாயிலாகவும் படம் சிறப்பாக அமையவில்லை. மான நஷ்ட வழக்குப் போட்டு நீதிமன்றத்துக்கு செல்லும் இடத்திலேயே மக்கள் புரட்சி ஏற்பட்டு ஜதுநாத் போட்ட வழக்கில் அவருக்கே சிக்கல் ஏற்படுவது போன்ற கிளைமேக்ஸ் காட்சிகள் ஒரு ஸ்டேஜ் டிராமா போலவே உள்ளது. ஓடிடி ரசிகர்கள் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











